முடிவுக்கு வந்த 9 ஆண்டுகளாக கூட்டணி.. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது மதிமுக

  • சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழக அரசியல் சூழல் அடியோடு மாறியுள்ளது. திமுக கூட்டணி உடைந்துவிட்டது. அதிமுக கட்சியே உடைந்து பல முன்னாள் அமைச்சர்கள் தவெக, திமுக கட்சிகளில் இணைந்து வருகிறார்கள். திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளிடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் மதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது இந்தக் கூட்டத்தில், திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக அறிவித்துள்ளது.

    Advertisement

    மதிமுக உயர்நிலை குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ, பொருளாளர் செந்திலதிபன், அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜுனன் உள்ளிட்ட முக்கியமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு, அரசியல் களத்தில் ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன. அந்த வரிசையில் மதிமுகவும் மாற்றத்திற்கு தயாராகியுள்ளது.

    Advertisement

    தவெக ஆதரவு நிலையில் மதிமுக

    இதுகுறித்து மதிமுக நிர்வாகிகள் கூறுகையில், "கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே திமுக - மதிமுக இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. சட்டமன்ற தேர்தலில் பிரச்சனை மேலும் அதிகரித்தது. தேர்தலில் திமுக சார்பில் மதிமுகவுக்கு நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதிலும் கூட திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நெருக்கடி கொடுத்தனர். இதை பெரும்பாலான நிர்வாகிகள் விரும்பவில்லை.

    தலைவர் வைகோவுக்கு இரண்டாவது முறை மாநிலங்களவை எம்பி பதவியும் வழங்கவில்லை. தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு ராஜ்யசபா ஒதுக்கப்பட்டன. மதிமுகவை தொடர்ந்து அவமானப்படுத்தியதாகவே கருதுகிறோம். திமுகவின் பெரியண்ணன் மனநிலையால் கூட்டணியில் இருந்த அனைத்து கட்சிகளுமே அதிருப்தியில் தான் இருந்தனர். தேர்தலின் போதும், தேர்தலுக்கு பிறகும் அது வெட்ட வெளிச்சமானது. முதலமைச்சர் விஜய் வைகோவை சந்தித்து அரசியல் நாகரீகத்தை ஏற்படுத்தினார்.

    Advertisement

    திமுக மீது அதிருப்தி

    துரை வைகோவுடனும் மரியாதை நிமித்தமாக பேசி வருகிறார். முதல் மாநாட்டில் கூறியபடி கூட்டணி அமைச்சரவை கொடுத்து தவெக கூட்டணி தர்மத்தை காப்பாற்றியுள்ளது. தேர்தலில் மதிமுக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேநேரத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் தவெகவுக்கு ஆதரவளிக்க முடியாத நிலை உருவானது. காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து மதிமுகவும் தவெக கூட்டணியில் இணைவது பற்றிய ஆலோசனையில் இருக்கிறது. எம்எல்ஏக்கள் இருவரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    மதிமுகவின் இரண்டு எம்எல்ஏக்களில் சீர்காழி தொகுதி எம்எல்ஏ செந்தில்செல்வன் உயர்நிலைக் குழு கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கடையநல்லுார் தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டார். கட்சி நலனை கருத்தில் கொண்டு அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. உயர்நிலை கூட்டத்தில் பேசிய பலரும் தவெக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்தனர்.

    Advertisement

    பொதுக்குழு

    இந்நிலையில் மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை அண்ணாநகரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் செந்தில் செல்வன் மட்டுமல்லாது, ராஜேந்திரனும் கலந்துகொள்ளவில்லை. 2 பேருமே கலந்துகொள்ளாதது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது

    இதற்கிடையே, திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தவெகவுடன் கூட்டணியா என்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English Summary

    Tamilnadu politics witness massive change after the assembly election. MDMK likely toleft DMK alliance important decision to be taken in General body meeting today.