மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்

  • சென்னை: சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தமிழ்நாடு அரசியல் களம் அப்படியே மாறியுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுக எதிர்க்கட்சியாகிவிட்டது. தமிழகத்தை அதிகமுறை ஆண்ட அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக, ஐயூஎம்எல் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. அதிமுகவின் அதிருப்தி எம்எல்ஏக்களும் தவெகவுக்கு ஆதரவளித்துள்ளனர். ஆட்சியில் பங்கு என்ற விஜயின் முடிவு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மதிமுகவும் தவெக பக்கம் சாய்வதற்காக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய முடிவு செய்ததாம். துரைவைகோ குமுறல்களை கொட்ட, விஜய் பிடி கொடுக்காமல் நகர்ந்துவிட்டாராம்.

    Advertisement

    ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்கிற தவெகவின் முடிவு தமிழக அரசியலை திருப்பிப் போட்டுள்ளது. திமுக கூட்டணி உடைந்துவிட்டது. தவெக அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் இடம்பெற்றுள்ளது. கம்யூனிஸ்ட்களையும் அமைச்சரவையில் இடம்பெற தவெக அழைத்தது. திமுக கூட்டணியில் தேமுதிக தவிர மற்ற கட்சிகள் தவெக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளன. அந்த வகையில் மதிமுகவும் தவெக ஆதரவு நிலையில் உள்ளது.

    Advertisement

    துரை வைகோ முடிவு

    விஜய் முதலமைச்சராக பதவியேற்றதும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை வீட்டிற்கு சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். விஜய் மற்றும் தவெகவுக்கு ஆதரவாக வைகோ மற்றும் துரை வைகோ கருத்து கூறி வருகிறார்கள். திருச்சி சென்ற விஜயை மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்தார். அதனை தொடர்ந்து விஜயை அவரின் வீட்டிற்கு சென்றும் துரை வைகோ சந்தித்தார்.

    திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டாதால் தவெகவுக்கு ஆதரவளிக்க முடியாமல் போய்விட்டது என்று மதிமுக வருத்தத்தில் உள்ளது. இந்நிலையில் விஜய் - துரை வைகோ சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சட்டமன்ற தேர்தலில் மதிமுக 4 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதில் மதிமுகவுக்கு உடன்பாடு இல்லை. இந்நிலையில் தவெகவுடன் கூட்டணியில் இணையும் முடிவில் துரை வைகோ இருக்கிறாராம்.

    Advertisement

    நோ சொன்ன விஜய்

    இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறுகையில், "மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல் தனி சின்னத்தில் போட்டியிருந்தால் இந்நேரம் தவெக அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கலாம் என துரை வைகோ நினைக்கிறார். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார். விஜயிடம் அவர் நேரடியாக தன் மனக்குமுறலை கொட்டியுள்ளார்.
    நீங்கள் சொன்னால் எங்களின் 2 எம்எல்ஏக்கள் இப்போதே ராஜினாமா செய்ய தயார். திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி உடனடியாக தவெக கூட்டணியில் இணைகிறோம்.

    இடைத்தேர்தலை ஒன்றாக சந்திக்கலாம் என்று துரை கூறியுள்ளார். விஜய்க்கு இதில் பெரிதாக உடன்பாடு இல்லை. ஏற்கனவே குதிரை பேரம் விமர்சனத்தை எதிர்க்கட்சிகள் அதிகம் வைக்கின்றன. இதே நிலை தொடர்ந்தால் தவெகவுக்கு மேலும் அவப்பெயர் உண்டாகும். அதனால் தான் அதிமுகவில் இருந்து மேலும் சில எம்எல்ஏக்கள் பதவி ராஜினாமா செய்ய தயாராக இருந்தும் விஜய் வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம். ஏற்கனவே 5 தொகுதிகள் காலியாகவுள்ளன. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கூட்டணியில் இருந்து விலக வாய்ப்பில்லை.

    Advertisement

    ஆலோசனை

    கம்யூனிஸ்ட்கள் விலகினால் கூட அதை இடைத்தேர்தலில் வெற்றி பெறும் தொகுதிகளை வைத்து சமாளித்துவிடலாம் என்று விஜய் நினைக்கிறார். எனவே இப்போதைக்கு ராஜினாமா வேண்டாம். கூட்டணி குறித்து பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்று சொல்லிவிட்டாராம். அதே நேரத்தில் விஜயின் வியூக வகுப்பாளர்களுக்கு இதில் மாறுபட்ட கருத்து நிலவுகிறதாம். தவெகவுக்கு பெரும்பான்மை கிடைப்பதற்கு மதிமுகவின் ஆதரவும் வேண்டும். எனவே துரை வைகோவுடன் பேசி முடிவு எடுப்பது சிறந்தது என நினைக்கிறார்கள். அதனால் விஜய் யோசித்து முடிவு செய்வார்" என்றனர்.

    English Summary

    MDMK MLA's decided to resign. Durai vaiko planning to join TVK alliance. However CM Vijay not intrested with this deal now.