இடைத்தேர்தலில் களமிறங்கும் வைகோ? முதல்வர் விஜய் உடன் சந்திப்பு.. நெருங்கும் மதிமுக - தவெக!

  • சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் ஜோசப் விஜய்யை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசியுள்ளார். மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வரும் சூழலில் இந்தச் சந்திப்பு திமுக கூட்டணி வட்டாரத்தில் சலசலப்பைக் கிளப்பிவிட்டுள்ளது.

    Advertisement

    நாளை சட்டசபை கூடும் சூழ்நிலையில் விஜயுடன் வைகோ சந்தித்து பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடையில்லா சான்றிதழ் வழங்கக் கூடாது என முதலமைச்சர் விஜய்யிடம் வைகோ கோரிக்கை விடுத்துள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    விஜய் உடன் வைகோ சந்திப்பு

    நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்திருந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் தமிழக முதல்வர் விஜய்யை வைகோ தலைமைச் செயலகத்தில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் உடன் இருந்தனர்.

    முன்னதாக வைகோ மற்றும் திருச்சி எம்.பி துரை வைகோ ஆகியோர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவான கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். அதிலும் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் நின்றது துரதிருஷ்டவசமானது, அதனால் எங்களால் விஜய்க்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முடியவில்லை என துரை வைகோ அண்மையில் பேசியிருந்தார். அது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.

    Advertisement

    திமுக கூட்டணி கட்சிகள்

    திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், சிபிஐஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் வெளியேறும் சூழல் ஏற்பட்ட நிலையில் இன்று நடைபெற்றுள்ள இந்தச் சந்திப்பு முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக, 4 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 2 இடங்களில் வெற்றி பெற்றது. தவெகவுக்கு திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் பலவும் ஆதரவளித்த நிலையில் மதிமுக, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் தவெகவுக்கு ஆதரவளிக்க முடியாமல் போனது.

    மதிமுக - தவெக

    முதலமைச்சரான பிறகு ஜோசப் விஜய், மரியாதை நிமித்தமாக வைகோவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் விஜய் கலந்துகொள்ள சென்றபோது, துரை வைகோ எம்.பி நேரில் சென்று விஜய்யை சந்தித்தார்.

    Advertisement

    இடைத்தேர்தலில் வைகோ?

    இந்நிலையில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக முடிவெடுத்துள்ளதாகவும், தவெகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்துவதோடு, அக்கட்சியின் 2 எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து, இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் வைகோ நேரடியாக களமிறங்கலாம் என்றும் தகவலக்ள் வெளியாகி வருகின்றன.

    திமுக கூட்டணியில் மதிமுக, 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தல் எனத் தொடர்ந்து நீடித்து வந்தது. 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்ந்திருந்த போதிலும் துரை வைகோ போட்டியிட்ட திருச்சி தொகுதியில் அவர்களுக்கு பம்பரம் சின்னம் கிடைக்கவில்லை.

    Advertisement

    2 எம்.எல்.ஏக்கள்

    இதனால், உதயசூரியன் சின்னத்தில் மதிமுகவை நிற்கச் சொல்லி திமுக தலைமை வலியுறுத்தியதாகக் கூறப்பட்ட நிலையில், தேர்தல் கூட்டம் ஒன்றில் மேடையிலேயே அழுதுவிட்டார் துரை வைகோ. பின்னர் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மதிமுக 1 தொகுதியில் தனிச் சின்னத்தில் நிற்பது, 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் நிற்பது என முன்னர் முடிவு செய்யப்பட்டு, பின்னர், 4 தொகுதிகளிலுமே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 2ல் வெற்றி பெற்றிருந்தது.

    English Summary

    MDMK General Secretary Vaiko met Chief Minister Joseph Vijay today. Reports suggest that the MDMK has decided to withdraw from the DMK alliance and that Vaiko might personally contest a by-election after having two MDMK MLAs resign their seats.