Vaiko: உறவே மொத்தமாக அந்து போச்சு! மதியாதார் வாசல் மிதியார்! திமுக கூட்டணி குறித்து மனவேதனையில் வைகோ

  • சென்னை: மதிமுகவில் இருந்து விலகியவர்களுடனான உறவு அறுந்துவிட்டது. மரியாதை இல்லாத இடத்தில் இருக்க வேண்டாம் என நிர்வாகிகள் தெரிவித்ததால் அந்த கூட்டணியை முறித்துக் கொண்டோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தமிழக அரசியலில் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட வைகோ, சமீபகாலமாக மௌனம் காத்து வந்த நிலையில், தற்போது மனம் திறந்து பேசியுள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

    Advertisement

    புதிய தலைமுறை சேனலுக்கு அவர் பேட்டி அளித்திருந்தார்."மரியாதை இல்லாத இடத்தில் இனி நீடிக்கப் போவதில்லை" என்று அவர் கூறியிருப்பது, திமுக உடனான உறவில் ஏற்பட்டுள்ள விரிசலை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

    ஒரு காலத்தில் திராவிட இயக்கத்தின் போர்வாளாகத் திகழ்ந்தவர், இன்று தன் கட்சியின் கௌரவத்திற்காகக் குரல் எழுப்பியுள்ளார்.திமுக கூட்டணியில் மதிமுக புறக்கணிக்கப்படுவதாக எழுந்த புகார்கள் குறித்துப் பேசிய வைகோ, மற்ற கட்சிகளுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று ஆதங்கப்பட்டார்.

    தொகுதிகள் ஒதுக்கீட்டின் போது சமமான வாய்ப்பு கேட்டதாகவும், ஆனால் அது நிராகரிக்கப்பட்டு ஒருவித நிர்ப்பந்தமான சூழலிலேயே கையெழுத்திட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த அணுகுமுறை கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் மனவருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

    Advertisement

    கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் சிலர் விலகிச் சென்றது குறித்துப் பேசிய அவர், "உறவே மொத்தமாக அறுந்துவிட்டது" என்று வேதனையுடன் கூறினார். தான் யாரிடமும் பதவிகளுக்காகக் கையேந்தியது இல்லை என்றும், நேர்மையையும் நாணயத்தையும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

    தன்னை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் தன் மீதும், தன் மகன் துரை வைகோ மீதும் சுமத்தும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தின் மூலம் சட்டப்படி எதிர்கொள்ளப் போவதாகவும் அவர் எச்சரித்தார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்துப் பேசிய வைகோ, விஜய்யின் கொள்கைகளில் சில நேர்மறையான அம்சங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

    Advertisement

    குறிப்பாக, இருமொழிக் கொள்கை, மதச்சார்பின்மை மற்றும் ஊழல் ஒழிப்பு போன்ற விஜய்யின் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என்றார். அனுபவமின்மையால் சில நிர்வாகத் தவறுகள் நேரலாம் என்றாலும், காலப்போக்கில் அவர் தன்னைத் தயார்படுத்திக் கொள்வார் என்று விஜய் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

    காவிரி மற்றும் மேகதாது விவகாரங்களில் எதிர்க்கட்சித் தலைவரின் நிலைப்பாட்டை விமர்சித்த வைகோ, இப்பிரச்சினைகளின் ஆழம் தெரியாமல் கருத்துக்கள் கூறப்படுவதாகச் சாடினார்.

    பழைய நடுவர் மன்றத் தீர்ப்புகள் நமக்குச் சாதகமாக இருக்கும்போது, புதிய நடுவர் மன்றம் கோருவது தமிழகத்தின் உரிமைகளைப் பாதிக்கும் என்று எச்சரித்தார். இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவசாயிகளின் கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்று அவர் தெளிவுபடுத்தினார்.

    Advertisement

    மதிமுகவின் பலம் குறித்துப் பேசிய அவர், கட்சி முன்பைவிட இப்போது வலுவாகவும் பொலிவோடும் இருப்பதாகக் கூறினார். சமீபத்தில் நடந்த பொதுக்குழுவில் 99 சதவீத உறுப்பினர்கள் கலந்து கொண்டது கட்சியின் கட்டுக்கோப்பைக் காட்டுவதாகப் பெருமிதம் கொண்டார்.

    டெல்லி முதல் தமிழகத்தின் மூலை முடுக்கு வரை போராட்டங்களை முன்னெடுக்கும் சக்தி மதிமுகவுக்கு இன்றும் இருப்பதாகவும், வரும் காலங்களில் மாநில சுயாட்சி மற்றும் திராவிடக் கொள்கைகளைக் காக்கத் தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் கூறினார்.

    English Summary

    MDMK General Secretary Vaiko explains to the media, why he left from DMK Alliance. He also shares bitter experience of the MDMK activist who quit the party.