மேகதாது: கர்நாடகாவின் பிடிவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்? அவசர ஆலோசனை!

  • சென்னை: காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கிற்கு எதிராகத் தமிழக அரசு தனது அடுத்தகட்ட அதிரடி வியூகத்தை வகுக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாகத் தமிழக முதல்வர் ஜோசப் விஜய், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

    Advertisement

    கர்நாடக மாநிலத்தின் அத்துமீறல்களுக்கு மத்தியில், தமிழ்நாட்டின் வாழ்வாதார உரிமைகளை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதில் புதிய அரசு தீவிரம் காட்டி வருவதாகத் தெரிகிறது.

    Advertisement

    இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலத்தின் நீராதாரம் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த முக்கிய முடிவுகளை எடுக்கும் வகையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் பங்கேற்றுள்ளனர்.

    மேகதாதுவில் அணை கட்டுவதன் மூலம் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் அபாயம் உள்ளதாக விவசாய அமைப்புகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. இந்தச் சூழலில் நடைபெற்ற இக்கூட்டத்தில், "மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் சட்டப்பூர்வமான உரிமைகளை எவ்வித சமரசமும் இன்றி நிலைநாட்டுவது எப்படி?" என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

    Advertisement

    உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரின் அளவை உறுதி செய்வது, கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுவதற்கான சட்ட ரீதியான அடுத்தகட்ட நகர்வுகள் ஆகியவை குறித்து இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

    "மேகதாது திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு எந்தவித உரிமையும் இல்லை. மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு மிகவும் உறுதியாக உள்ளது" என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் அண்மையில் பேசியிருந்தார். கர்நாடக மாநிலத்தின் இந்த கருத்துக்குத் தமிழக அரசியல் களத்தில் கடும் கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே முதல்வர் விஜய்யின் இந்த அவசர ஆலோசனை அமையப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Advertisement

    தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றுள்ள சூழலில், காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகதாது அணை விவகாரம் புதிய அரசுக்கு மிக முக்கியமானதொரு சவாலாக உருவெடுத்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணி மற்றும் அரசியல் கணக்குகளைத் தாண்டி, தமிழக மக்களின் காவிரி உரிமையில் இந்த அரசு காட்டும் உறுதிப்பாடு, ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் உற்றுநோக்கப்படுகிறது.

    நீதிமன்றப் போராட்டமா அல்லது மத்திய அரசிடம் அழுத்தமான அரசியல் அழுத்தமா? மேகதாது விவகாரத்தில் தமிழக அரசின் அடுத்த 'மூவ்' என்னவாக இருக்கும் என்பது இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் விரைவில் அதிகாரப்பூர்வமாகத் தெரியவரும்.

    English Summary

    Tamil Nadu government has begun formulating its next phase of strategic action against the Karnataka government's unilateral approach regarding the construction of a new dam across the Cauvery River at Mekedatu. In this regard, Tamil Nadu Chief Minister Joseph Vijay held urgent consultations with ministers and senior officials at the Secretariat in Chennai.