சென்னை: சட்டசபையில் மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்று திமுக எம்எல்ஏ கோவி.செழியன் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்துள்ளார். குறுவை சாகுபடி பொய்த்துவிட்ட நிலையில், சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, விரைவில் நல்ல செய்தி வெளியாகும் என்று அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளாகவே ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு வந்தது. ஒரு சில நேரங்களில் மே மாதத்திலேயே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை சாகுபடியை எந்த சிக்கலும் இல்லாமல் மேற்கொண்டு வந்தனர். தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.
காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில், கர்நாடகா அரசு குறைந்த அளவிலான தண்ணீரையே திறந்துவிடுகிறது. தற்போது ஆகஸ்ட் மாதத்தில் 15 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட்டிருக்கிறது. இதனால் மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. இருப்பினும் டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் போராடி வருகின்றனர். இதனால் சம்பா சாகுபடிக்காகவாவது மேட்டூர் அணை திறக்கப்படுமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் திமுக எம்எல்ஏ கோவி.செழியன், சட்டசபையில் டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரியில் தண்ணீர் எப்போது திறக்கப்படும் என்ற ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், கூடிய விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும் என்று பதில் அளித்தார். இதன்பின் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் அணை திறக்கப்படவில்லை என்று அமைச்சர் கூறி இருந்தார். தற்போது மேட்டூர் அணை நிரம்பி வருகிறது. டெல்டா மாவட்ட விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் பாதிக்கப்படுகிறார்கள். சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுமா? அப்படி திறக்கப்படும் என்றால், எப்போது திறக்கப்படும்? தண்ணீர் திறக்கப்படுவதை 15 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் தான், முதற்கட்ட பணிகளை விவசாயிகள் செய்ய முடியும் என்று தெரிவித்தார்.