சென்னை: உலகின் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 4,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் 2.1 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனராம். ஏஐ துறையில் அதிக முதலீடுகளை செய்து வரும் மைக்ரோசாஃப்ட், செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இந்நடவடிக்கையினை மேற்கொள்ளப் போகிறதாம்.
உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. விண்டோஸ் தயாரிப்பு மூலம் உலகம் முழுக்க பல கோடி மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. கணினி மென்பொருள் துறையில் இன்றியமையாததாக விளங்கி வரும் மைக்ரோசாஃப்ட், கிளவுட் சேவைகள், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட துறைகளிலும் முன்னணியில் உள்ளது.
தற்போதைய நவீன காலத்தில் ஏஐ பயன்பாடு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கு ஏற்ப மைக்ரோசாஃப்ட் நிறுவனமும், ஏஐ தொழில்நுட்பத்தில் அதிக அளவில் முதலீடு செய்து வருகிறது. ஏஐயில் அதிக முதலீடுகளை செய்து வருவதால் செலவுகளும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் செலவுகளை கட்டுப்படுத்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மிகப்பெரிய முடிவை எடுத்துள்ளது. அதாவது உலகம் முழுக்க மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 4,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருக்கிறதாம். அதாவது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த பணியாளர்களில் 2.1 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருக்கிறதாம். மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மீண்டும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்து இருப்பது அங்கு பணிபுரியும் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.