உதயநிதியை விடாதீங்க.. விஜய் போட்ட உத்தரவு.. பறந்த போன் கால்ஸ்.. கைதானது எப்படி?

  • சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் என்றும் இல்லாத வகையில், ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த அரசியல் நகர்வுகள் மாநிலத்தையே உலுக்கியுள்ளன. தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு, அதற்கு எழுந்த எதிர்ப்புகள், தமிழக வெற்றிக் கழகத்தின் உடனடி கொந்தளிப்பு, நள்ளிரவில் பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவு மற்றும் விடியற்காலையில் நடந்த அதிரடி கைது வரை அனைத்து நிகழ்வுகளும் ஒரு திரைப்பட திரைக்கதையை விட விறுவிறுப்பாக அரங்கேறியுள்ளன.

    Advertisement

    மேடையில் வெடித்த சர்ச்சை பேச்சு

    காவரி நதிநீர் பிரச்சனை மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய்யின் நிர்வாகத் திறமையைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

    Advertisement

    அவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோதே, கூட்டத்தில் இருந்த சிலர் எழுப்பிய கோஷங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்ட சில கருத்துக்களைத் தெரிவித்தார். அந்த பேச்சு, பெண்களை அவமதிக்கும் வகையிலும் நாகரிகமற்ற இரட்டை அர்த்த தொனியிலும் அமைந்திருந்ததாகக் கூறி, உடனடியாக சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதப் பொருளாக மாறியது.

    கொதித்தெழுந்த TVK தொண்டர்கள்

    உதயநிதியின் உரை வெளியான சில மணி நேரங்களிலேயே, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு அலை வீசியது. அரசியல் நாகரிகத்தின் எல்லை மீறிப் பேசுவதையும், பெண்களை இழிவுபடுத்துவதையும் சகித்துக் கொள்ள முடியாது என்று தவெக தலைவர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அடுத்தடுத்து அறிக்கை வெளியிட்டனர்.

    Advertisement

    நேற்று நாள் முழுவதும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் பேச்சைக் கண்டித்து தவெக மகளிர் அணியினரும் தொண்டர்களும் தெருவில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உதயநிதியின் உருவப்பொம்மையை எரித்தும், அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

    நிலமையை உணர்ந்த தவெக தலைமை, அடுத்த கட்டமாக மாநில தழுவிய அளவில் செவ்வாய்க்கிழமை அன்று மிகப்பெரிய முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

    நள்ளிரவில் பாய்ந்த எஃப்.ஐ.ஆர் - உளவுத்துறையின் ரகசிய ரவுண்ட்ஸ்

    போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தஞ்சாவூர் நகரக் காவல் நிலையத்தில் தவெக மகளிர் அணி அமைப்பாளர் சார்பில் உதயநிதி ஸ்டாலின் மீது முறைப்படி புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில், நள்ளிரவு 12 மணி அளவில் காவல் துறை அவசர அவசரமாக வழக்குப் பதிவு (FIR) செய்தது. வழக்குப் பதிவு செய்யப்பட்ட அடுத்த சில நிமிடங்களிலேயே, தலைமைச் செயலகம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளிடையே அவசர ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.

    Advertisement

    சட்ட ஒழுங்கு பிரச்சனையைத் தவிர்க்கவும், டிவிேக தொண்டர்களின் கொந்தளிப்பைத் தணிக்கவும் உதயநிதி ஸ்டாலினை உடனடியாகக் கைது செய்வதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என்று காவல்துறை தலைமை முடிவெடுத்தது. விஜய்யும் இதில் உறுதியாக உத்தரவுகளை பிறப்பித்து இருந்தாராம்.

    உடனே சென்னைக்குக் கிளம்பவும்

    முதல்வர் விஜய்யின் நேரடி மேற்பார்வையில், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட காவல்துறைக்குத் தெளிவான உத்தரவுகள் பறந்தன. இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்ட சிறப்புத் தனிப்படை போலீஸார், நள்ளிரவு 1:30 மணியளவிலேயே தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு அதிவேகமாகப் புறப்பட்டனர்.

    அதே நேரத்தில், சென்னை நீலாங்கரையில் அமைந்துள்ள உதயநிதி ஸ்டாலினின் இல்லத்தைச் சுற்றிலும் முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கணக்கான ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். நீலாங்கரை பகுதி முழுவதுமே காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, அப்பகுதியில் வாகனச் சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டன.

    Advertisement

    விடியற்காலை நீலாங்கரை இல்லம் முற்றுகை

    செவ்வாய்க்கிழமை விடியற்காலை 5:30 மணியளவில், தஞ்சாவூரில் இருந்து வந்த சிறப்புத் தனிப்படை போலீஸார் சென்னை நீலாங்கரையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் வீட்டை அடைந்தனர். துணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் குழு வீட்டிற்குள் சென்று, கைது ஆணையை காண்பித்தனர்.

    அந்த நேரத்தில் வீட்டில் இருந்த உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி, அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தி, "அவர் குளித்துக்கொண்டு இருக்கிறார், சற்று காத்திருங்கள்" என்று கூறி கால அவகாசம் கேட்டார். அதற்குள் தகவல் அறிந்து திமுகவின் மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான சேகர் பாபு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் அவசரம் அவசரமாக நீலாங்கரை இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர்.

    Advertisement

    வீட்டின் வாசலிலேயே காவல் அதிகாரிகளைச் சந்தித்த தலைவர்கள், "அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு கைது நடவடிக்கை மேற்கொள்வது ஜனநாயகத்திற்கு எதிரானது" என்று கூறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வீட்டின் முன் பெரும் பரபரப்பும் பதற்றமும் தொற்றிக் கொண்டது. "இது ஒரு செம காமெடி நாடகம்!" - புன்னகையோடு பதிலளித்த உதயநிதி அதிகாரிகளுடன் நடந்த நீண்டநேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் அமைதியாக வீட்டை விட்டு வெளியே வந்தார்.

    வீட்டின் வாசலில் கூடியிருந்த செய்தியாளர்களும், திமுக ஆதரவாளர்களும் அவரைச் சூழ்ந்து கொண்டனர். போலீஸாரின் இந்த கைது நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சற்றும் பதற்றமின்றி சிரித்தபடியே பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்: "ஆட்சிப் பொறுப்புக்கு வந்து 3 மாதங்களிலேயே மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பைச் சமாளிக்க முடியாமல், ஆளுங்கட்சி இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. ஒரு சாதாரண அரசியல் பேச்சை எதிர்கொள்ள முடியாமல், தஞ்சாவூரிலிருந்து போலீஸை அனுப்பி என்னை கைது செய்வது என்பது ஒரு 'செம காமெடி!'. சட்டரீதியாக இந்த வழக்கை நாங்கள் எதிர்கொள்வோம்.

    இந்த அடக்குமுறைகளுக்கு எல்லாம் திமுக என்றுமே அஞ்சாது" என்று கூறிவிட்டு காவல் வாகனத்தில் ஏறினார்.

    கைதுக்குப் பிந்தைய அரசியல் சூறாவளி

    உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட செய்தி வெளியானதும், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

    English Summary

    Midnight Drama to Early Morning Arrest: What happened behind the arrest of Udhayanidhi Stalin?