தென்காசி: தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்கள் ஏற்றி செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக தென்காசி மாவட்டம் கேரள எல்லையான புளியரை பகுதியில் வழக்கத்திற்கு மாறாக சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.
எப்போதும் கனரக வாகனங்கள் அணி வகுத்து செல்லக் கூடிய இந்த சாலையில், கனரக வாகனங்கள் இன்றி சாலைகள் காலியாக உள்ளன. இதனால் அப்பகுதியில் நிலவிய போக்குவரத்து நெரிசலும் தீர்ந்து இருப்பதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு ஜல்லி, கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வந்தன. தமிழ்நாட்டின் இயற்கை வளம் அழிவதோடு கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவதால் கனிம வளங்கள் பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். குறிப்பாக தென்காசி மாவட்டம் கடையம், ஆலங்குளம் பகுதியில் இருந்து அதிகளவில் இரவு நேரங்களில் லாரிகள் புளியரை வழியாக கேரளாவுக்கு சென்றுகொண்டிருந்தன. தொடர்ச்சியாக லாரிகள் இயக்கப்பட்டு வந்ததால் அப்பகுதிகளில் சாலைகளும் மோசமடைந்தன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தான், தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து முதல்வர் விஜய் உத்தரவிட்டார். இதையடுத்து, வெளி மாநிலங்களுக்கு கனிமவளங்களுடன் செல்லும் லாரிகள் அடியோடு நிறுத்தப்பட்டன. அதுபோக தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் புளியரை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு செல்வதை பார்க்க முடியும். இரவு - பகல் பாராமல் 24 மணி நேரமும் சாரை சாரையாக கனரக வாகனங்கள் சென்று வந்த நிலையில், இந்த தடைக்கு பிறகு வாகனங்கள் எதுவும் செல்லாமல் சாலையே வெறிச்சோடி காணப்பட்டது. கனிம வளங்களுடன் வந்த ஒன்றிரண்டு லாரிகளையும் தடுத்து நிறுத்திய போலீசார் அவற்றை மேற்கொண்டு செல்லவிடாமல் நிறுத்தினர். இதனால் சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்திவிட்டு டிரைவர்கள் அங்கேயே காத்துக் கிடந்தனர். கனிம வளங்களுடன் லாரிகள் போக்குவரத்து நின்றதால் செங்கோட்டை புளியரை பகுதிகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு கொண்டு செல்ல தமிழக அரசு தடை விதித்து இருப்பதை வரவேற்று அப்பகுதியில் உள்ள இனிப்புகள் வழங்கி கொண்டாடியதையும் பார்க்க முடிந்தது. அதேநேரத்தில், கனிம வளங்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையால் கேரளாவில் நடைபெறும் கட்டுமான பணிகள் முடங்கும் அபாயம் இருப்பதால் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேரள முதல்வர் விடி சதீசன், தமிழக முதல்வர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார். அதே நேரத்தில் தமிழக அரசு விதித்து இருக்கக்கூடிய தற்காலிக தடையை நிரந்தர தடையாக மாற்ற வேண்டும் என்றும் அரசுக்கு இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கனிம வளங்கள் ஏற்றி செல்ல தடை
வெறிச்சோடி காணப்பட்ட சாலை
நிரந்தர தடையாக மாற்ற வேண்டும்