ஆ.ராசா திருமாவளவனிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்”.. கொந்தளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

  • சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திருமாவளவனை விமர்சித்த திமுக எம்.பி ஆ.ராசாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ஆ.ராசா திருமாவளவனிடம் மன்னிப்பு கோரவேண்டும் என ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    தவெக அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக விசிக எம்.எல்.ஏ வன்னியரசு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக ஐ.யு.எம்.எல் ஷாஜகான் ஆகியோர் இன்று பதவியேற்றனர். தவெக அமைச்சரவையில் விசிக இணையும் முடிவை திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி சாடியிருந்தார். இந்நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆ.ராசாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "திமுகவில் இன்று கடமையும், கண்ணியமும், கட்டுப்பாடும் இல்லை. சொல்ல முடியாத வார்த்தைகளால் ஆ.ராசா விமர்சித்துள்ளார். மக்களின் தீர்ப்பை தான் ஜனநாயக சக்திகள் செயல்படுத்தி உள்ளன. தமிழக மக்களிடமும், விசிக தலைவர் திருமாவளவனிடமும் ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும்.

    ஆ.ராசாவை திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி கண்டிக்க வேண்டும். பெண்ணின் உறவை வைத்து பேசும் ஒரு வார்த்தையை பயன்படுத்தி ஒரு கட்சியின் தலைவரை விமர்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். விசிக தலைவர் திருமாவளவனை விமர்சித்து திமுக எம்பி ஆ.ராசா வெளியிட்ட பதிவினை கடுமையாக கண்டிக்கிறோம்" என்றார்.

    Advertisement

    மேலும் பேசிய ஆதவ் அர்ஜுனா, "சமூகநீதி, மதச்சார்பற்ற அமைச்சரவையை முதலமைச்சர் விஜய் உருவாக்கி உள்ளார். சாதிய அரசியல், மத அரசியல், பண அரசியல் என அனைத்தையும் தூக்கி எறிந்துள்ளார் முதலமைச்சர் விஜய். சாதி, குடும்ப பின்புலம் பார்க்காமல் அனைத்து கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு கொடுத்து இளைஞர் அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவே பார்த்து பிரமிக்கும் வகையில் ஒரு இளைஞர்கள் அடங்கிய அமைச்சரவையை முதலமைச்சர் விஜய் உருவாக்கி உள்ளார். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சிக்கு உறுதியாக உழைத்தவர்களுக்கு பதவி அளிக்கப்பட்டுள்ளது.

    அண்ணா கனவு கண்ட அமைச்சரவையை முதலமைச்சர் விஜய் உருவாக்கி உள்ளார். 59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. அதிகாரம் ஒருவரிடம் மட்டும்தான் இருக்க வேண்டுமா? என முதன்முதலில் கூறியவர் திருமாவளவன்.

    Advertisement

    அனைத்து கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெற்ற இந்த நாள்தான் உண்மையான சமூக நீதி நாள் என முதலமைச்சர் விஜய் கூறினார். விசிக, ஐயூஎம்எல் எம்எல்ஏக்கள் அமைச்சராக பொறுப்பேற்ற உடன் முதலமைச்சர் விஜய் நெகிழ்ந்து போனார்.

    த.வெ.க வெற்றி பெறவே பெறாது என்றார்கள், கடுமையாக உழைத்ததால் வெற்றி சாத்தியமாகி உள்ளது. த.வெ.க. வெற்றிபெற கடுமையாக உழைத்தவர்களுக்கு பதவியும், பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சராக நியமிக்கும் வரை ரமேஷின் சாதி எங்களுக்கு தெரியாது. பெரியார், அண்ணா, அம்பேத்கர் கொள்கைகள் வழியில் தான் தவெக அரசு செல்லும்." எனத் தெரிவித்துள்ளார்.

    English Summary

    Minister Aadhav Arjuna strongly condemned DMK MP A Raja for criticizing Thirumavalavan. Aஅdhav Arjuna insisted that A Raja must apologize to Thirumavalavan.