சென்னை: தமிழக அரசியலில் இப்போது புதிய ஆட்சி அமைந்துள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ள நிலையில், இன்று அமைச்சர்கள் அனைவரும் தங்கள் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினர்.. கடந்த திமுக அரசில் உதயநிதி பயன்படுத்திய அறை இப்போது விஜய் அமைச்சரவையில் உள்ள ஆதவ் அர்ஜுனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது தவெக தலைமையிலான கூட்டணி அரசு அமைந்துள்ளது. இதுவரை 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். விரைவில் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உட்பட மற்றவர்கள் அமைச்சராகப் பதவியேற்பார்கள் எனத் தெரிகிறது. தற்போது அமைச்சராகப் பதவியேற்றவர்கள் தங்கள் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய முகங்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா, இவருக்குப் புதிய அமைச்சரவையில் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழா கடந்த வாரமே முடிந்த போதிலும், இலாகா ஒதுக்குவதில் தாமதம் இருந்து வந்தது. இந்தச் சூழலில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டன. இந்தச் சூழலில் தான் இன்றைய தினம் அமைச்சர்கள் தங்கள் பணிகளைத் தொடங்கினர். முதலில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் உடன் அனைத்து அமைச்சர்களும் ஆலோசனையை நடத்தினர். அதைத் தொடர்ந்து தங்கள் அறைகளுக்குச் சென்று பணிகளைத் தொடங்கினர். செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கு நேரில் சென்று முதல்வர் விஜய் வாழ்த்து சொன்னார். அதன்படி அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் தனிப் பணிகளைத் தொடங்கினார். ஆதவ் அர்ஜுனாவுக்கு முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்திய அதே அலுவலக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இருந்தார். தற்போது புதிய அரசில் விளையாட்டுத் துறை ஆதவ் அர்ஜுனாவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், உதயநிதி பயன்படுத்திய அதே அறையைத் தான் இப்போது புதிய விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையின் மீது தனக்கு இருக்கும் ஆர்வம் காரணமாக, இந்தத் துறையை ஆதவ் அர்ஜுனாவே முதலமைச்சரிடம் கேட்டுப் பெற்றதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்தச் சூழலில், அவர் உதயநிதிக்கு ஒதுக்கப்பட்ட அறையிலேயே அமர்ந்து தனது பணிகளைத் தொடங்கினார் ஆதவ் அர்ஜுனா! முதலமைச்சருடனான ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்து உடனடியாகப் பணிகளை ஆரம்பித்தார். பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத் துறை அதிகாரிகளை அழைத்து, முந்தைய திமுக அரசு தொடங்கிய திட்டங்களின் தற்போதைய நிலை என்ன, எவையெல்லாம் பாதியில் நிற்கின்றன, அவற்றுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்துக் கேட்டறிந்தார். விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவிருப்பதால், தேர்தல் சமயத்தில் தவெக கொடுத்த புதிய திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அவற்றை எப்படிச் செயல்படுத்தலாம் என்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி வருகிறார். ஆதவ் அர்ஜுனாவை பொறுத்தவரை அவர் சட்டசபைத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். அவர் சுமார் 66,400 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை விடச் சுமார் 17,300 வாக்குகள் அதிகம் பெற்று ஆதவ் அர்ஜுனா வென்றார். அதிமுக வேட்பாளர் விஜயகுமார் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.ஆதவ் அர்ஜுனா
உதயநிதி ரூம்
பணிகளைத் தொடங்கினார்
ஆய்வு