முதல்வர் சரியில்லைங்க.. நிலைமை மோசமாகிடுச்சு.. அமித் ஷாவிற்கு போன புகார்.. அடுத்து ஆக்சன்!

  • சென்னை: புதுச்சேரி முதலமைச்சர் என்.ரெங்கசாமியை பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் புகார் வாசித்திருக்கிறார் பாஜகவின் புதுவை அமைச்சர் நமச்சிவாயம். புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. ரெங்கசாமி முதலமைச்சரானார். ஆட்சி அமைத்து 50 நாட்கள் ஆகியும் இன்னும் முழுமையான நிர்வாக கட்டமைப்புக்குள் வராமல் தள்ளாடிக் கொண்டிருக்கிறது புதுவை அரசு என்பதுதான் பாஜகவின் குற்றச் சாட்டு.

    Advertisement

    ரெங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றபோது அவருடன் நமச்சிவாயம் மற்றும் மல்லாடி கிருஷ்ணராவ் ஆகிய இருவர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இன்னும் 3 அமைச்சர்கள் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், அவர்களை தேர்வு செய்வதில் பாஜக தலைமையுடன் முரண்பட்டார் ரெங்கசாமி. அதனால் மூன்று பேர் அமைச்சராவதில் இழுபறி நீடித்தது. குறிப்பாக, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ்சுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தியது பாஜக. அதனை ஏற்க மறுத்தார் ரெங்கசாமி. அதனாலேயே இழுபறி. இத்தகைய இழுபறிகளால் அமைச்சர்களாக பொறுப்பேற்ற 2 அமைச்சர்களுக்கும் இலாகாவை ஒதுக்காமல் கிடப்பில் வைத்திருந்தார் ரெங்கசாமி.

    Advertisement

    இதனை அடுத்து தொடர்ந்து நடந்த பஞ்சாயத்தில் கடந்த ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் சிவக்கொழுந்து, ராஜசேகர், ராஜவேல் ஆகிய 3 பேருக்கு அமைச்சர் வாய்ப்பளித்தார் ரெங்கசாமி. அவர்களும் பொறுப்பேற்றனர். 5 அமைச்சர்களில் நமச்சிவாயமும் ராஜசேகரும் பாஜகவை சேர்ந்தவர்கள். இனியாவது அமைச்சர்கள் 5 பேருக்கும் என்னென்ன இலாகா என்பதை ரெங்கசாமி ஒதுக்கீடு செய்வார் என புதுவை பாஜக அமைச்சர்களும், பாஜக கட்சியினரும் எதிர்பார்த்தனர். ஆனால், இப்போது வரை இலாகா ஒதுக்காமல், இலாகா இல்லாத அமைச்சர்களாகவே நீடிக்கிறார்கள். இதனால் ரெங்கசாமிக்கு எதிராக அதிர்ப்திகள் அதிகரிப்பது ஒருபுறம் என்றால், அரசு நிர்வாகம் சரிவர இயங்காமல் ஸ்தம்பித்துப் போய்க் கிடக்கிறது.

    Advertisement

    இந்த நிலையில்தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சில தகவல்களை பாஸ் செய்திருக்கிறார் பாஜக அமைச்சர் நமச்சிவாயம். இது குறித்து புதுவை பாஜக சோர்ஸ்களிடம் விசாரித்தபோது , ''மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசாங்கத்தில் 50 நாட்களுக்கும் மேலாக இலாகா இல்லாத அமைச்சர்களாக தொடர்வது கேலிக்கூத்து. துறைகள் ஒதுக்காமல் இருக்கிறோமே என்கிற குறைந்தபட்ச யோசனைக்கூட இல்லாமல் சித்தன் போக்கு, சிவன் போக்கு என்கிற பாணியில் இருந்து வருகிறார் ரெங்கசாமி.

    இலாகாக்கள் ஒதுக்கப்படாததால் எந்த ஒரு துறையிலும் அதன் பணிகள் முழுமையாக நடக்கவில்லை. அமைச்சரவை கூட்டம் நடக்கவில்லை. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஆயத்த பணிகளும் தொடங்கப்படவில்லை. மக்கள் நலப் பணிகள் எதுவுமே நடக்கவில்லை. அமைச்சர்களிடம் மக்கள் குறைபட்டு கொள்வது அதிகரித்து வருகிறது. அவைகளுக்கு தீர்வு கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள் அமைச்சர்கள்.

    Advertisement

    எந்த துறையின் அமைச்சர் என்பது தெரியாமலே செக்ரட்டரியேட்டுக்கு அமைச்சர்கள் வந்து போகிறார்கள். பாஜக அமைச்சர்களுக்குத்தான் இந்த அதிருப்தி என்பதல்ல ; ரெங்கசாமி கட்சியை சேர்ந்த அமைச்சர்களும் இதே மனநிலையில் தான் இருக்கிறார்கள்.

    இதனையெல்லாம் ஜீரணிக்க முடியாமல்தான், அமித் ஷாவை தொடர்பு கொண்டு, 50 நாட்களாக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கப்படாததால் அரசு நிர்வாகம் சீர்குலைந்து கிடக்கிறது. முதலமைச்சர் எங்களை சந்திக்கவே மறுக்கிறார். நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் ஜூலைக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

    ஆனா, அதற்கான ஆய்வு பணிகளோ ஆயத்தப் பணிகளோ எதுவும் இங்கு நடக்கவில்லை. இது குறித்து முதலமைச்சர் அக்கறைக்காட்ட மறுக்கிறார். மத்திய அரசு இதில் உடனடியாக தலையிட வேண்டும். அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்ய முதல்வருக்கு உத்தரவிடுங்கள். நீங்கள் தலையிட்டால் தான் எல்லாம் ஒழுங்குக்கு வரும் என புகார் சொல்லியுள்ளார் நமச்சிவாயம். இது குறித்து மத்திய அரசு கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இந்த வாரத்தில் ஏதேனும் அதிசயம் நடக்கும் என்கிற எதிர்பார்ப்பில் அமைச்சர்கள் 5 பேரும் காத்திருக்கிறார்கள்'' என்று புதுவை அரசில் நடப்பது விவரிக்கின்றனர்.

    Advertisement

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    Minister Amit Shah gets complaints against Puducherry Chief Minister N. Rangasamy