குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்

  • சென்னை: அதிமுகவை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருந்த சம்பவம் தமிழ்நாடு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், எடப்பாடிதான் குதிரை பேரத்தில் ஈடுபட்டார் என்று அமைச்சர் அருண்ராஜ் விமர்சித்திருக்கிறார்.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக பெரிய வெற்றியை பெற்றிருந்தது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு தற்போது விஜய் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

    Advertisement

    முன்னதாக நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், அதிமுகவிலிருந்து 25 எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஏற்கெனவே பெரும்பான்மை எண்ணிக்கை இருந்த பின்னரும், அதிமுகவினர் இப்படி ஆதரவு தெரிவித்திருந்தது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சலசலப்பு அடங்குவதற்கு முன்னரே, அதிமுகவை சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்திருந்தனர். ராஜினாமா செய்த கையோடு அவர்கள் தவெகவில் இணைந்திருந்தனர்.

    அப்படியெனில் இது நிச்சயமாக குதிரை பேரம் தான் என்று அதிமுக கடுமையாக விமர்சித்திருந்தது. "தூய சக்தி என்று தன்னை சொல்லிக்கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசு தன்னை காப்பாற்றிக்கொள்வதற்கு, திமுக கூட்டணிக் கட்சிகளின் கால்களில் நேரடியாக விழுந்தது. அதேநேரம், தூய சக்தி துஷ்ட சக்தியாக மாறி, குதிரை பேர அரசியல் வியாபாரம் நடத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதுகில் குத்தி உள்ளது.

    Advertisement

    பொதுவாக எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைப்பதற்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து டிசைன் டிசைனாக கற்பனை செய்திகள் வலம் வரும். அப்படித்தான், திமுக-வுக்கு எதிராக தொடங்கப்பட்ட இயக்கம், திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. இந்தச் செய்தி உண்மையா என்று நேரில் கேட்டவர்களுக்கு தெளிவான விளக்கம் அளித்தோம். அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மக்களும், நம் கட்சியின் நிர்வாகிகளும் உறுதியாக நம்பினார்கள்.

    ஆனால், தமிழக வெற்றிக் கழகம், நம் கட்சிக்குள் குதிரை பேர வியாபாரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும், ஒருசில நிர்வாகிகளை நம்மிடம் இருந்து பிரிக்க முற்பட்டது என்பது வேதனையான உண்மை. தமிழக வெற்றிக் கழகம் இப்போதைக்கு பொய்க்கால் குதிரை அரசு அமைத்துவிட்டது" என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.

    Advertisement

    இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிதான் குதிரை பேரத்தில் ஈடுபட்டார் என்று அமைச்சர் அருண்ராஜ் விமர்சித்திருக்கிறார். "எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளர் எப்படி மனுவை வாபஸ் பெற்றார்? எடப்பாடி பழனிசாமி சூழ்ச்சி செய்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு மனுவை வாபஸ் வாங்க வைத்தார். குதிரை பேரம் பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை.

    திமுக உடன் கை கோர்த்து எடப்பாடி முதலமைச்சராக முடிவெடுத்திருந்தார். இதற்காக குதிரை பேரத்தில் அவர் ஈடுபட்டிருந்தார். திமுகவை எதிர்த்துதான் எம்ஜிஆர் கட்சியே ஆரம்பித்திருந்தார். இப்படி இருக்கையில் அரசியல் எதிரியுடன் கைகோர்க்க பிடிக்காமல்தான் அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து வருகின்றனர்" என்று விமர்சித்திருக்கிறார்.

    English Summary

    The incident involving the resignation of four AIADMK MLAs has created a stir in the Tamil Nadu political arena. While AIADMK General Secretary Edappadi Palaniswami criticized the TVK for engaging in horse-trading, Minister Arunraj has countered by accusing Edappadi himself of being the one involved in such practices.