“அரசு அதிகாரிகள் ஆட்சி நடைபெறுவதாக கம்யூனிஸ்ட்கள் கூறுவது வேடிக்கை - அமைச்சர் அருண்ராஜ் பதிலடி!

  • சென்னை: "இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்த மாணவர்களின் விவரங்களை சேகரிக்க சொன்னது அரசின் கவனத்திற்கு வராமல் நடைபெற்றது என்பதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது. இந்த ஒரு நிகழ்வை மட்டும் வைத்துக்கொண்டு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அரசு உள்ளது என சொல்வது வேடிக்கையாக உள்ளது." என கம்யூனிஸ்ட் கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.

    Advertisement

    அமைச்சர் அருண்ராஜ் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், திண்டுக்கல் மாவட்டத்தில் இடதுசாரி அமைப்புகளை சேர்ந்த மாணவர்களின் விவரங்களை எடுக்கச் சொன்னதை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் அரசு ஆட்சியாக இல்லாமல் அரசு அதிகாரிகள் ஆட்சியாக நடப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சனம் செய்தது குறித்து கேள்வி எழுப்பினர்.

    Advertisement

    அதற்கு பதில் அளித்த அமைச்சர் அருண்ராஜ், "கடந்த திமுக ஆட்சி தான் அதிகாரிகளின் ஆட்சியாக நடைபெற்றது. அப்போதைய முதலமைச்சருக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அதிகாரிகள் சொல்வது தான் உலகம் என்று நம்பிய ஆட்சி நடைபெற்றது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் இடதுசாரி அமைப்புகளைச் சார்ந்த மாணவர்களின் விவரங்களை சேகரிக்கச் சொன்னது அரசின் கவனத்திற்கு வராமல் நடைபெற்றது என்பதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது. அந்த சுற்றறிக்கை அனுப்பியவர்கள் மீது அரசு நடவடிக்கையும் எடுத்து உள்ளது.

    இந்த ஒரு நிகழ்வை மட்டும் வைத்துக்கொண்டு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அரசு உள்ளது என சொல்வது வேடிக்கையாக உள்ளது. அரசு அதிகாரிகள், இந்த ஆட்சியை வெளிப்படையான அரசு அமைந்துள்ளது என்பதை அவர்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்பாக பார்க்கின்றனர். ஒரு சிலர் செய்யும் தவறுகளினால் அனைத்தையும் தவறு என்று சொல்ல முடியாது." என்றார்.

    Advertisement

    தொடர்ந்து பேசிய அமைச்சர் அருண்ராஜ், "எதிர்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கேள்வி கேட்பது என்பது அவர்களுடைய கடமை. நியாயமான கோரிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பும்போது நிச்சயம் முதலமைச்சர் அதற்கான பதிலை அளிப்பார். எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக இருந்தது போன்றும், இந்த 100 நாட்களில் தான் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.

    சட்டமன்றத்தில் எந்த ஒரு உறுப்பினராக இருந்தாலும் தற்போது சமூகத்தில் நிலவும் சூழ்நிலை, மக்களின் எண்ணங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கக் கூடிய வகையில் அவருடைய பேச்சுகள் இருக்க வேண்டும். முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அரசு அமைந்த உடன் பெண்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு, பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

    Advertisement

    இப்படிப்பட்ட நிலையில் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இப்போது தான் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது என்கின்ற தோற்றத்தை திட்டமிட்டு உருவாக்கும் வகையிலும், இந்த அரசிற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேசியுள்ளார்.

    ஆனால் மற்ற எதிர்கட்சியை சேர்ந்த தலைவர்கள் யாரும் அப்படி பேசவில்லை. என்னைப் பொருத்தவரை எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்றத்தில் தனக்கான வாய்ப்பினை சரியாக பயன்படுத்தவில்லை என்று நினைக்கிறேன். முதலமைச்சர் அவருடைய பதிலுரையில் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவாக விளக்கம் அளிப்பார்" எனத் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் மு.வீரபாண்டியன் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "தவெகவின் நல்லாட்சி, நல்ல திட்டங்களை வரவேற்று ஆதரிப்போம். அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியது தொடர்பாக அமைச்சர்கள் அளித்த விளக்கத்தை ஏற்கவில்லை. மக்கள் அதிகாரத்தின் குறியீடாக உள்ள முதலமைச்சர், அமைச்சர்கள் தான் அதிகாரிகளை வழிநடத்த வேண்டும்.

    Advertisement

    தமிழ்நாட்டில் தலைகீழாக உள்ளது, அதிகாரிகள் வழிநடத்துகின்றனர். தவெக கூட்டணியில் நாங்கள் இல்லை. தவெகவை வெளியில் இருந்தே ஆதரிப்போம், கூட்டணியில் நாங்கள் இடம்பெறவில்லை" எனத் தெரிவித்தார்.

    English Summary

    “An explanation has already been provided regarding the fact that the collection of details on students associated with Left-wing organizations took place without the government's knowledge. It is absurd to claim that the government is under the control of officials based solely on this single incident,” Minister Arunraj said, hitting back at the allegations made by Communist parties.