விஎஸ் பாபு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாரா? அருண்ராஜ் கொடுத்த பரபர விளக்கம்!

  • சென்னை: கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு அமைச்சர் அருண்ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

    Advertisement

    கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை வீழ்த்தி சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் வி.எஸ்.பாபு. ஸ்டாலினை தோற்கடித்ததால், தமிழ்நாடு முழுவதும் வி.எஸ்.பாபுவின் முகம் சென்று சேர்ந்தது. இதனால் வி.எஸ்.பாபுவுக்கு அமைச்சரவையில் முக்கிய இடம் கிடைக்கும் என்றும் கருதப்பட்டது.

    Advertisement

    ஆனால் அமைச்சரவையில் வி.எஸ்.பாபுவுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் வி.எஸ்.பாபு அதிருப்தி அடைந்தார். அமைச்சரவையில் இடம்பெற சில முயற்சிகளையும் மேற்கொண்டார். இதனிடையே கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து வெல்வதற்காக அங்கு அத்தனை அடிப்படை வசதிகளும் சரியாக செய்யப்பட வேண்டும் என்றும், புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்று விஜய் அறிவுறுத்தி இருந்தார்.

    ஆனால் திடீரென செப்டம்பர் 9ஆம் தேதி வி.எஸ்.பாபு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின் அடுத்த 13 நாட்களுக்கு வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால் செப்டம்பர் 22ஆம் தேதிக்கு பின் வி.எஸ்.பாபு உடல்நிலை தொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை.

    Advertisement

    முதல்வர் விஜய் ஒருமுறை நேரில் சென்று நலம் விசாரித்தார். அதேபோல் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், போனில் வி.எஸ்.பாபுவிடம் பேசினேன். அவர் நலமாக உள்ளார் என்று தெரிவித்தார். இருப்பினும் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிய வந்தது. இதனிடையே நேற்று சோசியல் மீடியாவில் வி.எஸ்.பாபு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக சில பதிவுகள் வெளியானது.

    இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில், கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

    English Summary

    Minister Arunraj Says Kolathur MLA V.S. Babu Continues ICU Treatment and Denies Discharge Rumours