காஞ்சிபுரம்: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது. இரண்டு தொகுதிகளையும் வைத்திருந்த அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. திமுக இண்டாம் இடத்தை பிடித்தது. அதிமுகவின் தோல்வி பேசு பொருளாகியுள்ளது. தவெக மீது எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அகங்காரத்துடன் நடந்து கொள்கிறார். அவர் கட்சி நடத்தவில்லை கம்பெனி நடத்துகிறார் என்று அருண்ராஜ் விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் அமைச்சர் அருண்ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "எடப்பாடி பழனிசாமி கட்சி நடத்தவில்லை. அவர் ஒரு தனி நபர் நிறுவனம் நடத்துகிறார். அம்மா தான் அந்தக் கட்சியை நடத்தினார். இவர் அந்தக் கட்சியை எப்போதோ காலி செய்துவிட்டார். அதிமுகவை நிர்மூலப்படுத்திய எடப்பாடி பழனிசாமி தான். தேர்தலுக்கு முன்பே எங்கள் தலைவர் மிகவும் தெளிவாக சொன்னார்.
போட்டியே தவெக, திமுக இடையே என்று கூறினார். கள நிலவரம் அதுவாக தான் இருக்கிறது. உண்மையான அதிமுக தொண்டர்கள் எப்போதோ தவெக பக்கம் வந்துவிட்டனர். தலைவர் மீதான அன்பு, எதிர்பார்ப்பு, நம்பிக்கை ஆகியவை அதற்கு காரணம். அது மட்டுமல்லாமல் அந்த கட்சியின் தற்போதைய தலைவர் அனைவரையும் அரவணைத்து போகாமல் ஒரு அகங்காரத்தின் அடிப்படையில் கட்சி நடத்துகிறார். அதனால் தான் இந்த சூழல் ஏற்பட்டது. நம் இயக்கத்தை நோக்கி வருபவர்களை அரவணைத்து செல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. தவெக வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல, இது மக்கள் இயக்கம். தமிழ்நாட்டை அடுத்த 50 ஆண்டுகள் தொலைநோக்கு சிந்தனையுடன் வழிநடத்த வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. நம் இயக்கத்தை நோக்கி வந்தால், அவர்களை அரவணைப்பது நல்ல விஷயம் தான். யாருக்கு என்ன பதவி கொடுக்க வேண்டும் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார். தனியார் மருத்துவ கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் உள்ளது. அரசு பொறுப்பேற்றவுடன், என்ன கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதை மட்டுமே வாங்க வேண்டும் என்று கூறியுள்ளோம். சவிதா கல்லூரியில் கட்டணம் வசூல் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். 4.5 ஆண்டுகளுக்கு மேல் கட்டணம் வாங்க கூடாது. பயிற்சி காலத்துக்கு கட்டணம் வாங்க கூடாது. விதிகள்படி நடவடிக்கை எடுப்போம். மாணவர்களுக்கு ஆதரவாக இருப்போம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படும். இடதுசாரி தோழர்களுக்கு மக்கள் நலன் சார்ந்த ஆட்சி இருக்க வேண்டுமென்பது அவர்களின் நோக்கம். இதற்கு முன்பு இருந்த கூட்டணியில் ஆட்சி எப்படி இருந்தது. தற்போது அவர்கள் எதிர்பார்த்த நேர்மையான ஆட்சியை முதலமைச்சர் சாத்தியப்படுத்தியுள்ளார். அவர்களின் ஆதரவு நமக்கு தான் இருக்கும். பாமகவுடனான கூட்டணி குறித்து காலப்போக்கில் தான் தெரியும்" என்றார்.எடப்பாடிக்கு அகங்காரம்
தோழர்கள் கவனத்துக்கு