சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், 15 நாட்களுக்கு பிறகே இன்றைய தினம் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் போராடுவோர்களை சந்தித்தனர். உடனடியாக நிறைவேற்றக்கூடிய அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவதாகவும் அமைச்சர்கள் வாக்குறுதி அளித்தனர்.
பணி நிரந்தரம், குறைந்தபட்ச ஊதியம், வார விடுமுறை என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உழைப்போர் உரிமை இயக்க மாநிலத் தலைவர் பாரதி தலைமையில் நடக்கும் இந்த போராட்டம் 2 வாரங்களுக்கு மேலாக தொடர்ந்து நடந்து வருகிறது.
இரு வாரங்களாக போராட்டம் நடக்கும் போதிலும் தமிழ்நாடு அரசு சார்பில் இருந்து போராடுவோரை யாரும் சந்திக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்திருந்தது. இதற்கிடையே போராட்டத்தின் 15வது நாளான இன்று அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ராஜ்குமார், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் போராடுவோரை நேரில் சந்தித்தனர். அப்போது அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் உங்களை சந்தித்து உங்களுடைய கோரிக்கை என்ன என்று கேட்டு வர சொன்னார். எப்போதும் போராட்டம் நடத்துபவர்களை பார்க்க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வரும்போது யாருக்கும் திருப்தியான ஒரு முடிவே இருக்காது. ஏதோ கடமைக்கு வராங்க.. நாமளும் ஏதோ கடமைக்கு சொல்கிறோம் என்றே போராட்டம் நடத்துவோர் நினைப்பார்கள். ஆனால், இங்கு எனக்கு இங்கு நல்ல வரவேற்பு கொடுத்தீர்கள். உங்கள் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சி. தமிழக முதல்வர் உங்களுக்கு எல்லாமே செய்வார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறது. நாங்கள் வந்து 114, 115 நாட்கள்தான் ஆகிறது. ஆனால், உங்கள் அனைவருக்கும் ஒரு சூட்சுமம் தெரிந்துவிட்டது. மற்ற ஆட்சியில் ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்தால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால், இந்த ஆட்சியில் மக்களுக்கு பிரச்சினை என்றால் முதல்வர் கேட்பார் என்பது உங்களுக்கு புரிகிறது. பிரச்சினையை தீர்க்கக்கூடிய முதலமைச்சர் என்பது உங்களுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. நீங்களும் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறீர்கள். அப்போதெல்லாம் உங்களை எப்படி தூக்கி சென்றார்கள் என்பதை நாடே பார்த்தது.. வேனில் ஏற்றி எங்கோ போய் விட்டார்கள். ஆனால், நாங்கள் எல்லாம் அப்படி இல்லை. நம்ம முதலமைச்சர் ஏழை, எளிய மக்களுடன் இருக்கக்கூடிய ஒரு மக்கள் முதல்வர். அதனால், நீங்கள் எல்லாம் என்ன கேட்கிறீர்களோ, உங்கள் கோரிக்கை எல்லாம் நியாயமானதுதான்.. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், பழைய ஆட்களா எல்லாம் கஜானாவைக் காலி பண்ணிட்டு போய்ட்டாங்க. கஜானா பெயருக்கு தான் இருக்கிறதே தவிர அதில் நிதி இல்லை. அந்த கஜானாவை முழுமையாகப் பராமரித்து, அதற்கு என்னென்ன தேவையோ, உண்மையாக மக்களுடைய வரிப் பணத்தை, நாங்கள் ஒரு ரூபாய் கூட எடுக்காமல் மக்களின் வரியை கஜானாவுக்கு எடுத்து செல்கிறோம். உங்களுக்கு கோரிக்கைகளை சொல்லி இருக்கிறீர்கள். உடனடியாக அமைச்சர்கள் குழுவும் அதிகாரிகளும் கலந்து பேசுவார்கள். எதை எல்லாம் உடனடியாக செய்ய முடியுமோ.. முதல்வர் அதையெல்லாம் கண்டிப்பாக செய்து தருவார் என்பதை நான் கூறி கொள்கிறேன். இப்போது என்னை சிரித்து கொண்டே வரவேற்றீர்கள். அந்த சிரிப்பானது இந்த ஆட்சி இருக்கும் வரை தொடரும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்" என்றார். அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், "வாக்குறுதிகளில் என்னவெல்லாம் உடனடியாக செய்ய முடியுமோ அதை செய்து வருகிறோம். இப்போது நாங்கள் 4 அமைச்சர்கள் மட்டும் இங்கு வரவில்லை.. முதல்வரின் மனமும் இங்குதான் இருக்கிறது. ஏன் இப்போது தான் வருவீர்களா என நீங்கள் கேட்கலாம்.. எதிர்க்கட்சியாக இருக்கும்போது அரசை வலியுறுத்த முதல்நாளே வந்திருப்போம். ஆனால் ஆளும் கட்சியாக இருப்பதால் பிரச்னைக்கு தீர்வை கண்டுபிடித்துத்தான் வரவேண்டும். அதனால் தான் தாமதம் ஆகிவிட்டது" என்றார்.15வது நாள்
பிரச்சினைகள் புரிகிறது
மக்கள் வரி பணம்
முதல் நாளே ஏன் வரவில்லை