சென்னை: அரசு பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டிருந்தபோது, மாணவிகளிடம் அவர் நடந்துக்கொண்ட விதம் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், அமைச்சர் ஆய்வு என்கிற பெயரில் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தை மீறியுள்ளார் என்றும், எனவே இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக எம்பி சல்மா வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சரின் ஆய்வு பல்வேறு தளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, ஆங்கிலம் என்பது ஒரு மொழிதானே ஒழிய, அறிவல்ல எனும் அடிப்படை உண்மையை அமைச்சர் உணரவில்லை என்றும், தன்னை அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதற்காக ஆங்கிலமறியாத அக்குழந்தையைக் குற்றப்படுத்தலாமா? என்று்ம, கடைசி பெஞ்ச் குழந்தைகள் நன்றாகப் படிக்க மாட்டார்கள் எனும் பொருளில் பள்ளியில் பேசலாமா? எனவும் அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
இப்படி இருக்கையில், அமைச்சர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் திமுக எம்பி சல்மா புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில், "விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் கீர்த்தனா அண்மையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவி ஒருவரை பொதுவெளியில் அவமானப்படுத்தும் வகையில் அமைச்சரின் செயல்பாடு அமைந்துள்ளது. மேலும், அந்த மாணவியின் அடையாளத்தை மறைக்காமல் சமூக வலைதளங்களில் அது தொடர்பான வீடியோக்களை அவர் பகிர்ந்துள்ளார். இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டுள்ளது. மேலும், முன்வரிசையில் அமர்ந்துள்ள மாணவர்களை கடைசி வரிசையில் அமரும் மாணவர்களுடன் ஒப்பிட்டு அமைச்சர் கீர்த்தனா பேசியதற்கு உளவியலாளர்கள் மற்றும் கல்வி வல்லுநர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமைச்சர் கீர்த்தனாவின் இந்தச் செயல் குழந்தைகள் பாதுகாப்புச் சட்டங்களுக்கு எதிரானதாகும். எனவே, சட்டத்தை மீறி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.