நான் லஞ்சம் கொடுத்தேன்! சட்டசபையில் உளறிய மரிய வில்சன்.. செங்கோட்டையன் சிக்கிட்டாரே? போச்சு

  • சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே அனல் பறக்கும் விவாதங்கள் அரங்கேறி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குவதில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றதாக அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் முன்வைத்த குற்றச்சாட்டு, அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

    Advertisement

    சட்டப்பேரவையில் அமைச்சர் வைத்த பகீர் குற்றச்சாட்டு

    சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் மரிய வில்சன், முந்தைய திமுக ஆட்சியின் போது கல்வி நிறுவனங்களிடம் கட்டாயப்படுத்தி பணம் வசூலிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

    Advertisement

    "கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறையில் கட்டாயப்படுத்திதான் பணம் வசூலித்தார்கள். இதில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். எனது பள்ளிக்கு அங்கீகாரம் பெறுவதற்கே லஞ்சம் கேட்கப்பட்டது; அதற்கு நானே சாட்சி! சென்னை தி.நகரில் யாரிடம், எங்கு வைத்து பணம் கொடுக்கப்பட்டது என்பதை என்னால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடியும். இந்த விவகாரத்தில் என் மீது என்ன வழக்கு தொடரப்பட்டாலும், அதை சட்டரீதியாக எதிர்கொள்ள நான் தயார்" என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

    அன்பில் மகேஷ் காட்டம்: லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்

    அமைச்சர் மரியா வில்சனின் இந்தக் குற்றச்சாட்டுக்கு முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மற்றும் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்தார். பதவியில் இருக்கும் ஓர் அமைச்சர், தான் லஞ்சம் கொடுத்ததாக பகிரங்கமாக ஒப்புக்கொள்வது சட்டப்படி தவறு என்றும் அவர் சாடினார்.

    Advertisement

    இது தொடர்பாகப் பேசிய அன்பில் மகேஷ், "பதவியில் இருக்கும் ஒரு அமைச்சர் தான் லஞ்சம் கொடுத்ததாகக் கூறுவது அடிப்படை விதிகளுக்கே எதிரானது. இரண்டு மாதங்களுக்கு முன்புகூட என் மீது இதே போன்ற அவதூறு பரப்பப்பட்டது; அதற்காக ₹50 கோடி நஷ்டஈடு கேட்டு நான் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். அந்த நபர் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அந்தப் பின்னணியில் இருந்து கொண்டு அமைச்சர் இப்படிப் பேசுகிறாரா என்று தெரியவில்லை.

    லஞ்சம் கொடுத்ததாகக் கூறும் அமைச்சரிடம் முதலில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரிடம் முறைப்படி புகார் அளிக்க உள்ளோம். எப்போதும் அன்பையும் பாசத்தையும் மட்டுமே பேசுவதாகக் கூறும் அமைச்சர் மரியா வில்சன், தற்போது உள்நோக்கத்துடன் அவதூறு பரப்புகிறார். இது முழுக்க முழுக்க அரசியல் திசைதிருப்பல் நாடகம்" என்று தெரிவித்தார்.

    Advertisement

    செங்கோட்டையனுக்குத்தான் சிக்கல்

    இந்த விவகாரம் சட்டப்பேரவைத் தளத்தைத் தாண்டி விவாதப் பொருளான நிலையில், அமைச்சர் குறிப்பிட்ட பள்ளியின் காலவரிசை மற்றும் அப்போதைய ஆட்சிகள் குறித்த சில முக்கியக் கேள்விகளை அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்:

    தொடங்கப்பட்ட ஆண்டு: சர்ச்சைக்குரிய கல்வி நிறுவனம் 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    விரிவாக்கம்: அந்தப் பள்ளியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத் தகவலின்படி, பள்ளி வளாகம் மற்றும் கட்டமைப்பு 2017 ஆம் ஆண்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

    ஆட்சிக் காலம்: பள்ளி தொடங்கப்பட்ட 2003 ஆம் ஆண்டும், விரிவாக்கம் செய்யப்பட்ட 2017 ஆம் ஆண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியே நடைபெற்றது.

    Advertisement

    அப்போதைய கல்வி அமைச்சர்: 2017 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக கே. ஏ. செங்கோட்டையன் பொறுப்பில் இருந்தார்.

    பள்ளியின் தொடக்கம் மற்றும் விரிவாக்கக் காலகட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிகழ்ந்திருக்கும் போது, அமைச்சர் யாரையும் நேரடியாகப் பெயரிடாமல் பொதுப்படையாக திமுக ஆட்சியின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தது ஏன் என்ற விவாதமும் எழுந்துள்ளது.

    சட்டப்பேரவையில் கிளம்பிய இந்த லஞ்சப் புகார் விவகாரம், தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை புகார் மற்றும் நீதிமன்ற அவதூறு வழக்கு என்ற அடுத்தகட்ட அரசியல் களத்திற்கு நகர்ந்துள்ளது.

    English Summary

    Minister Maria Wilson Alleges Bribe in School Approval, but there is a mistake