வழக்கை வாபஸ் பெற சொல்லி அழுத்தம் கொடுக்குறாங்க.. ஆனாலும் பின் வாங்க மாட்டோம்.. மரிய வில்சன் சகோதரர்

  • சென்னை: வழக்கை வாபஸ் பெற வைப்பதற்காக தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் சார்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ள சூழலிலும் இந்த வழக்கில் இருந்து பின் வாங்க மாட்டோம் என அவரது சகோதரர் மரிய கிளோத் கூறியுள்ளார். மேலும் நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    தற்போதைய தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் புதுவையில் உள்ள தனது சகோதரரின் வீட்டிற்குள் புகுந்து சகோதரர் மற்றும் மனைவியை கட்டையால் தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் சமீபத்தில் வெளியாகி இருந்தன. இது தொடர்பாக மரிய வில்சன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு புதுவை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    Advertisement

    மரிய வில்சன் சகோதரர் பேட்டி

    புதுவை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் இன்று மரிய வில்சன் நேரில் ஆஜராகுமாறு நீதிபதிகள் கூறியிருந்தும், பட்ஜெட் தயாரிப்பது தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாக கூறி இன்றும் அவர் ஆஜர் ஆகவில்லை. இதையடுத்து வழக்கு வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் "வழக்கை வாபஸ் பெற வைப்பதற்காக அமைச்சர் மரிய வில்சன் சார்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ள சூழலிலும் பின் வாங்க மாட்டோம் என மரிய கிளோத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    நான் தான் தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சனின் சகோதரர் மரிய கிளோத். சொந்த சகோதரர். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு 8 ஆம் தேதி, மரிய வில்சன் எங்க வீட்டுக்குள் நுழைந்து கொலைவெறி தாக்குதல் நடத்தினார். அத பத்தி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இன்று வழக்கு விசாரணை நடந்தது. ஆனால் மரிய வில்சன் நேரில் ஆஜர் ஆகவில்லை. வரும் 10 ஆம் தேதி கண்டிப்பாக ஆஜர் ஆக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

    நீதித்துறையை மட்டுமே நம்பி இருக்கிறோம்

    2022 ஆம் ஆண்டில் இருந்தே அந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் இருந்தே எங்கள் மீதான வழக்கை திரும்ப பெற சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருக்கின்றனர். ஏன் மீதும் என் மனைவி மீதும் நிறைய பொய் வழக்குகள் போடுகிறார்கள். ஆனால் நீதித்துறையை மட்டுமே நம்பி இருக்கிறோம். இவ்வளவு கஷ்டங்களையும் தாண்டி இந்த வழக்குகளை எதிர்கொள்கிறோம் என்றால் நீதித்துறை மீதுள்ள நம்பிக்கையில் மட்டும்தான்.

    Advertisement

    கொலை வெறி தாக்குதல்..

    எங்கள் மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதலுக்கு பிறகு நாங்கள் எங்க இருந்தோம் என்று யாருக்குமே தெரியாது. குடும்பத்தில் இருக்கிற யாருக்கும் தெரியாது. தமிழகத்தில் தான் போய் இருந்தோம். அயல்நாட்டுக்கும் போனோம். அங்கே கொஞ்ச நாள் இருந்தோம். எல்லாத்தையும் சட்டப்பூர்வமாக சந்தித்து வருகிறோம். முதல் நோக்கம் என்னவென்றால் எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவங்களுடைய சகாக்கள் நிறைய பேர் இருக்காங்க.. அவங்க தான் நிறைய பொய் வழக்குகளை எங்கள் மீது போட்டு இருக்கிறார்கள்.

    வழக்கறிஞர் பாஸ்கர் என்று ஒருவர் இருக்கிறார். உளுந்தூர்பேட்டையை சேர்ந்த இவர் கட்டப்பஞ்சாயத்தும் செய்கிறார். இவர் தான் எங்களுக்கு அதிக தொல்லை கொடுத்தது. பாண்டிச்சேரியில் எங்களுக்கு பாதுகாப்பு கிடையாது. அதனால் தான் வெளிநாட்டில் தங்கி இருக்கோம். டிரஸ்ட் டிஸ்ட்ரிபியூட்டில் தான் அண்ணன் தம்பி பிரச்சினை ஏற்பட்டது. இந்த டிரஸ்ட் செயல்பாட்டில் மிஸ் மேனேஜ்மெண்ட் நிறைய நடந்தது. இதனை நான் நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவு வாங்கினேன். அதற்கு பிறகு தான் என் மீது அவர் தாக்குதல் நடத்தினார். அதில் இருந்து நாங்களும் மறைந்து வசித்து வருகிறோம்" என்று கூறினார்.

    English Summary

    Marie Wilson: Maria Claude, brother of Minister Marie Wilson, alleged that continuous pressure is being exerted on them to withdraw a case on behalf of the minister. He said the family would not back down despite concerns over their safety and vowed to pursue the matter through legal means.