“பத்திரிகையாளர்களை கண்டாலே கிடுகிடுன்னு ஓடுறேனா?” - திமுக எம்எல்ஏ பேச்சுக்கு அமைச்சர் ஆனந்த் பதில்!

  • சென்னை: பத்திரிக்கையாளர்களை பார்த்தால் மட்டும் அமைச்சர் ஆனந்த் கிடுகிடுன்னு ஓடிவிடுகிறார் என திமுக எம்.எல்.ஏ சட்டசபையில் விமர்சித்த நிலையில், அமைச்சர் ஆனந்த் பதில் கொடுத்துள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 19) ஊரக வளர்ச்சித் துறை, நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இன்றைய விவாதத்தில் பல்வேறு கட்சி உறுப்பினர்களும் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தவெக அமைச்சர்கள் இடையே காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

    Advertisement

    ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் பத்திரிக்கையாளர்களை சந்திப்பது இல்லை என்றும் செய்தியாளர்களை கண்டாலே ஓடி விடுகிறார் என்ற விமர்சனத்தை எதிர்க்கட்சியினர் முன்வைத்து வருகின்றனர். மேகதாது விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட சமயத்தில் கூட, அந்த துறையை சார்ந்த அமைச்சர் ஆனந்த் பத்திரிக்கையாளர்களின் கேள்வியை எதிர்கொள்ளாமல் சிரித்துக்கொண்டே நழுவிச் சென்றது சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இன்று சட்டசபையில் திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரன் பேசும்போது, "அமைச்சர் ஆனந்த் சட்டசபையில் பேசும்போது நல்லா சுமாளித்து விடுகிறார். பத்திரிகையாளர்களை கண்டால் மட்டும் ஏன் கிடுகிடுகிடுன்னு ஓடுறாருனு தெரியல... ஜருகண்டி..ஜருகண்டி.. என திருப்பதி கோவிலில் சாமி கும்பிட ஓடுவது போல" என கிண்டல் செய்தார்.

    Advertisement

    மேலும் பேசிய துரை சந்திரசேகரன், "அமைச்சர் ஆனந்த் எந்த பத்திரிக்கைக்கும் பதில் சொல்ல மாட்டேங்குறார். அது ஒரு புது டெக்னிக்காக உள்ளது. ராஜ்மோகன் இதையெல்லாம் சமாளிக்க இருக்கிறார். புஸ்ஸி ஆனந்த் ரொம்ப தீவிரமாக ஆய்வு பண்ணிட்டு இருக்கார். காவேரி சம்பந்தப்பட்ட ஃபைல் எல்லாத்தையும் படிச்சுட்டு இருக்கிறார். அதனால் அவரால் பத்திரிக்கைகளை சந்திக்க முடியல. அடிக்கடி கூட்டம் போட்டு வருகிறார் என சொல்லி சமாளித்தார். அவரின் அந்த பேட்டியை பார்த்து பார்த்து சிரித்தேன்" எனப் பேச்னார். இந்த கிண்டல் பேச்சால் அவை சிரிப்பலையில் ஆழ்ந்தது.

    இதற்கு பதிலளித்த அமைச்சர் என். ஆனந்த், "பிரஸ்ஸை பார்த்து நான் ஓடுகிறேன் எனக் கூறுகிறார்கள். நீங்கள் உங்களுக்கென ஒரு நிறுவனம் வைத்து, இவர்களிடம் இப்படி எல்லாம் கேளுங்கள் என சொல்லி எங்களிடம் கேட்க வைத்து ட்ரோல் செய்ய பார்க்கிறீர்கள்.'என்ன நலத்திட்டத்தை செய்தீர்களோ அதை மட்டும் சொல்விட்டு போங்க' என முதலில் மைக்கை நீட்டுவார்கள். உடனே நீங்கள் சொல்லிக் கொடுத்த இரண்டு கேள்விகளை சொருகி விடுவார்கள். இதுவே உங்க வேலையாக இருந்தது.

    Advertisement

    இதற்கெல்லாம் நாங்கள் ஓடவில்லை, பயப்படவில்லை. பிரஸ் எல்லாம் என்னுடைய நண்பர்கள்தான். ஆனால், அவர்கள் 75 வருடமாக அவர்கள் உங்களுடனேயே பழகிவிட்டார்கள். இப்போதுதான் எங்களுடன் பழகுகிறார்கள். தேவையில்லாததை பேசாமல், மக்களுக்கு வேண்டியதை முதல்வர் செய்யச் சொல்லியுள்ளார். யாரையும் பார்த்து பயம் கிடையாது. தீர்வுதான் நோக்கம்" எனப் பதில் அளித்தார்.

    English Summary

    Minister N Anand has responded after a DMK MLA criticized him in the Assembly, alleging that he hurriedly runs away whenever he sees Reporters.