சென்னை: தமிழக அரசியலில் அதிமுக உள்கட்சி மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது "கட்சித் தாவல் தடை சட்டம்" விவகாரம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, சட்டப்பேரவையில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில், சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி அணியை குறிவைத்து சட்ட ரீதியான எச்சரிக்கையை அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை எம்.பி வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவுக்கு மாறாக 25 எம்.எல்.ஏ.க்கள் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அதிருப்தியடைந்தது.
உடனடியாக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் கட்சிப் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. ஆனால், அந்த நடவடிக்கையை சண்முகம் தரப்பு ஏற்க மறுத்துள்ளது. "உண்மையான அ.தி.மு.க. நாங்கள்தான்" என்ற நிலைப்பாட்டில் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதிமுக பிளவு மேலும், சட்டப்பேரவையில் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் தங்களுடன் இருப்பதாகவும், சட்டப்பேரவை குழுத் தலைவர் மற்றும் கொறடா பதவிகளை அங்கீகரிக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர். இதற்கிடையே, சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி அணியில் உள்ள சில எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சரவை பதவி வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்தான் தற்போது சட்ட ரீதியான விவாதத்தை கிளப்பியுள்ளது. இன்பதுரை எம்.பி அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை எம்.பி தனது சமூக வலைதள பதிவில், "கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் புகாருக்கு உள்ளான ஒருவரை தகுதி நீக்கம் செய்ய அரசியலமைப்பு சட்டத்தின் 10வது அட்டவணை சபாநாயகருக்கு அதிகாரம் அளிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "அவ்வாறு புகாருக்கு உள்ளான எம்.எல்.ஏ. ஒருவரை அமைச்சராக பதவியேற்பதற்கு முன், அரசியலமைப்பு சட்டத்தின் 163வது பிரிவின்படி முதல்வரிடம் ஆளுநர் விளக்கம் கேட்க வேண்டும். அந்த விளக்கத்தில் திருப்தி அடைந்த பிறகே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார். பதவிநீக்கம் அதோடு, "விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில் ஒருவர் அமைச்சராக பதவி வகித்தால், உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தின் மூலம் அவரை பதவிநீக்கம் செய்ய முடியும்" என்றும் எச்சரித்துள்ளார். இதற்காக மணிப்பூர் மாநிலத்தில் அமைச்சர் தவுனோஜம் ஷியாம்குமார் சிங் தொடர்பான 2020 உச்சநீதிமன்ற தீர்ப்பையும் அவர் எடுத்துக்காட்டாக கூறியுள்ளார். சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி இந்த பதிவு வெறும் சட்ட விளக்கம் மட்டுமல்ல, நேரடியாக சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி அணிக்கு விடுக்கப்பட்ட அரசியல் எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. "அமைச்சர் பதவி ஏற்றால் தகுதி நீக்கம் நிச்சயம்" என்ற மறைமுக செய்தியை எடப்பாடி தரப்பு வெளிப்படையாக தெரிவித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் மறுபுறம், சண்முகம் தரப்பினர் தங்களிடம் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகவும், சட்டப்பேரவையில் உண்மையான அ.தி.மு.க. அணியே தாங்கள் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதனால், தற்போது சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் எடுக்கும் முடிவே இரு அணியின் தலையெழுத்தை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது. ஒருபுறம் தகுதி நீக்க கோரிக்கை, மறுபுறம் அமைச்சரவை வாய்ப்பு, இன்னொரு புறம் அ.தி.மு.க. தலைமைக்கு உரிமை கோரும் இரு அணிகள் என, தமிழக அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சபாநாயகர் முடிவு வெளியாகும் வரை இந்த சஸ்பென்ஸ் தொடரும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.