அசத்தும் அமைச்சர் ராஜ்மோகன்.. ஆபீஸ் வாசலில் வந்திறங்கிய நவீன மெஷின்! எல்லாம் டெக்னாலஜி.. சூப்பர்!


  • சென்னை: தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களை நேரில் சந்தித்து மனு அளிப்பது பொதுமக்களுக்கு பல நேரங்களில் சவாலான அனுபவமாக இருந்து வருகிறது. நீண்ட நேர காத்திருப்பு, கூட்ட நெரிசல், முன்பதிவு சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் சிரமப்படுவது வழக்கம். இந்த நிலையை மாற்றும் வகையில், பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன் புதிய டெக்னாலஜி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

    Advertisement

    அமைச்சரை சந்திக்க வருபவர்களுக்கு இனி க்யூஆர் குறியீடு மூலம் நேரம் ஒதுக்கப்படும் வசதி தலைமைச் செயலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலக வரலாற்றில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நவீன வசதி, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.

    Advertisement

    தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு, அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள், பெற்றோர் சங்கங்கள், பொதுமக்கள் தொடர்ந்து அமைச்சரை சந்தித்து வருகின்றனர்.

    அமைச்சர் ராஜ்மோகன்

    இதன் காரணமாக அமைச்சர் ராஜ்மோகனின் அலுவலகம் தினமும் கூட்டம் நிரம்பிய சூழலிலேயே காணப்பட்டு வந்தது. தொடக்க காலத்தில் அமைச்சரை மரியாதை நிமித்தமாக சந்தித்தவர்கள் மற்றும் வாழ்த்து தெரிவிக்க வந்தவர்கள் அதிகமாக இருந்தனர். அவர்களுடன் எடுத்துக்கொள்ளப்பட்ட புகைப்படங்களை நேரடியாக வழங்குவதற்குப் பதிலாக, க்யூஆர் குறியீடு மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதியை முதலில் அமைச்சர் அறிமுகப்படுத்தியிருந்தார்.

    Advertisement

    க்யூஆர் குறியீடு

    அந்த முயற்சி நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது அமைச்சரை சந்திக்கும் நேரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அமைச்சரின் அறைக்கு வெளியே சிறப்பு க்யூஆர் குறியீடு கருவி பொருத்தப்பட்டுள்ளது. அதை செல்போன் மூலம் ஸ்கேன் செய்தவுடன், ஒரு இணைய தளம் திறக்கப்படுகிறது. அதில் சந்திக்க விரும்பும் நபர் தனது பெயர், முகவரி, கைப்பேசி எண் மற்றும் கோரிக்கையின் விவரங்களை பதிவு செய்யலாம். பின்னர் கைப்பேசி எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை பதிவு செய்தவுடன் விண்ணப்பம் உறுதி செய்யப்படுகிறது.

    தலைமைச் செயலகம்

    அதன்பிறகு, அமைச்சரை எந்த நாள் மற்றும் எந்த நேரத்தில் சந்திக்கலாம் என்பது குறித்த தகவல் குறுந்தகவலாக சம்பந்தப்பட்ட நபரின் கைப்பேசிக்கு அனுப்பப்படுகிறது. இதனால் தலைமைச் செயலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. இந்த திட்டம் தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இதன் மூலம் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், மக்கள் நேரத்தை மிச்சப்படுத்தவும் முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    Advertisement

    அலுவலக பணி

    இந்த புதிய முயற்சி குறித்து அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத் துறைகள் என மூன்று முக்கிய துறைகளின் பொறுப்பு தன்னிடம் இருப்பதாகவும், தினமும் நூற்றுக்கணக்கானோர் தன்னை சந்திக்க வருவதாகவும் தெரிவித்துள்ளார். அலுவலக பணிகளுக்கு இடையிலும் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். சில நேரங்களில் இரவு 10 மணிக்கு பிறகும் தலைமைச் செயலகத்தில் இருந்து மனுக்கள் பெற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    மென்பொருள்

    அண்மையில் தன்னை சந்திக்க முடியாமல் ஒருவர் வருத்தம் தெரிவித்தது தனது மனதை பாதித்ததாக கூறிய அமைச்சர், அதன்பிறகே மாற்று வழி குறித்து மென்பொருள் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி இந்த திட்டத்தை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார். "ஒரு நபர் கூட என்னை சந்திக்க வந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லக்கூடாது என்பதுதான் என் விருப்பம். பொதுமக்களின் நேரத்தையும் மதிக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகள் விரைவாக பரிசீலிக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் இந்த முயற்சி" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    தொழில்நுட்ப வசதி

    மேலும், தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி மக்கள் சேவையை மேம்படுத்துவது தற்போதைய அரசின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் எளிமையை கொண்டு வருவதற்கான முயற்சியாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் அறிமுகமாகியுள்ள இந்த க்யூஆர் குறியீடு சேவை வெற்றிகரமாக செயல்பட்டால், எதிர்காலத்தில் மற்ற அமைச்சர்களின் அலுவலகங்களிலும் இதே நடைமுறை அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    English Summary

    Tamil Nadu minister Rajmohan launches QR-based appointment facility, making public grievance meetings faster and more transparent.