அவருக்கும் சேர்த்தே வேலை பார்ப்பேன்.. நடிகர் விஷால் விமர்சனத்திற்கு ராஜ்மோகன் பதில்!

  • சென்னை: தமிழக கல்வி அமைச்சர் ராஜ்மோகனை திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டத்துறை அமைச்சராக நியமித்திருப்பது ஏமாற்றம் அளிப்பதாக நடிகர் விஷால் கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு அமைச்சர் ராஜ்மோகன் இன்று விளக்கம் அளித்துள்ளார். விஷால் எனது நண்பர் என்றும், அவரது நம்பிக்கையை பெறும் வகையில் நான் பணி செய்வேன் எனவும் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், அமைச்சர் ராஜ்மோகனுக்கு கல்வித்துறையுடன் சேர்த்து திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டத்துறையையும் ஒதுக்கினார். இது குறித்து தனது எக்ஸ் தள பதிவில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் விஷால், திரைப்படத் துறையின் தற்போதைய நிலை மற்றும் அதன் தேவைகளை கருத்தில் கொள்ளும்போது இந்த முடிவு வருத்தம் அளிப்பதாக குறிப்பிட்டார்.

    Advertisement

    விஷால் விமர்சனத்துக்கு ராஜ்மோகன் பதில்

    இதற்கு நடிகர்கள் ஒரு சிலர் ஆதரவாகவும், ஒரு சில நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் அமைச்சர் ராஜ்மோகன் நடிகர் விஷால் கூறியது தொடர்பாக விளக்கம் அளித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    "என்னை விமர்சனம் செய்தவர்களுக்கும் சேர்த்தே வேலை பார்ப்பேன்.. நண்பர் விஷாலை எனக்கு பிடிக்கும். அவருடைய படங்களை நானும் பார்த்து இருக்கிறேன். அவருக்கு என்னை தெரியாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அவரை நன்கு தெரியும். எல்லாம் நம்பிக்கைத் தானே.. அவருடைய நம்பிக்கையையும் பெறும் வகையில் நான் நன்றாக பணி செய்து தளபதி விஜய்யின் பெயரை காப்பாற்றுவேன்" என்று கூறினார்.

    Advertisement

    நடிகர் விஷால் கூறியது என்ன?

    முன்னதாக விஷால் தனது ட்வீட் பதிவில் கூறியிருப்பதாவது:- "தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்களுக்கு அமைச்சகங்கள் ஒதுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரம், திரைப்படத் தொழில்நுட்பம் மற்றும் ஒளிப்பதிவுச் சட்டத்துறை அமைச்சராக ராஜ்மோகன் பொறுப்பேற்றிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. தற்போது நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் திரைப்படத் துறையில் பல சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன.

    தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களின் கோரிக்கைகள், பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் எவ்வாறு எடுத்துரைப்பது என்ற கேள்வி எழுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக திரைப்படத் துறையுடன் நேரடியாக தொடர்புடையவராக இருக்கும் முதல்வர் விஜய்க்கு இந்தத் துறையின் நிலைமை நன்கு தெரியும். ஆனால், இந்தத் துறையில் அனுபவம் குறைவாக உள்ளவரிடம் எங்கள் பிரச்சினைகளை எப்படி விளக்குவது?..

    Advertisement

    ராஜ்மோகனை விமர்சிப்பதற்காக அல்ல

    அரசு டிக்கெட் வழங்கும் முறையை அறிமுகப்படுத்த வேண்டும். இதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன், பார்வையாளர்களும் கூடுதல் கட்டணச் சுமையிலிருந்து விடுபடுவார்கள். "ஒரே இந்தியா, ஒரே வரி" என்ற கொள்கைக்கு முரணாக உள்ளாட்சி வரி விதிக்கப்படுவதால், அந்த வரியை ரத்து செய்ய வேண்டும். சிறிய படங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மானியத் தொகையை அதிகரிக்க வேண்டும்.

    ராஜ்மோகனை விமர்சிப்பதற்காக அல்ல. எனது தனிப்பட்ட கருத்தை மட்டுமே வெளிப்படுத்தியுள்ளேன். இந்தக் கோரிக்கைகள் கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. திரைப்படத் துறைக்கு தேவையான நிவாரணங்களை முதல்வர் வழங்குவார் என நம்புகிறேன்" என்று விஷால் தனது ட்வீட் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

    English Summary

    Rajmohan has responded to actor Vishal’s criticism over his appointment as Film Technology and Cinematography Minister. Calling Vishal a friend, Rajmohan said he respects the actor’s views and will work hard to earn his confidence through his performance.