“நாங்க கூட உட்கார்ந்து தான் கேட்டோம்.. அவங்க பக்தியோட நின்னுக்கிட்டே கேட்டாங்க” - அமைச்சர் ராஜ்மோகன்

  • சென்னை: "நாங்கள் கூட முதல்வர் பேசும்போது உட்கார்ந்துதான் கேட்டோம். ஆனால் எதிர்க்கட்சியினர் அவர் மீது கொண்ட பக்தியின் காரணமாக நின்றுகொண்டே மரியாதையாகக் கேட்டனர். அவர்களுக்கு நன்றி" என அமைச்சர் ராஜ்மோகன் சட்டசபையில் பேசியுள்ளார்.

    Advertisement

    சட்டமன்றத்தில் இன்று பேசிய தவெகவைச் சேர்ந்த ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ ஆனந்த் மோகன், "எதிர்க்கட்சியினர் தொடர்ச்சியாக உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புகின்றனர். அது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

    Advertisement

    அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், "எதிர்க்கட்சியினர் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார். அதை இன்று நமது முதல்வரே உடைத்துவிட்டார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சார்ந்த தோழர்கள் சொல்லாத ஒரு விஷயத்தைச் சொன்னதாக அறிக்கையிலும் சொல்லி, சட்டமன்றத்திற்கு எவ்வளவு மாண்பு உள்ளது என்பதை மீறி சட்டமன்ற வாசலிலும் சொன்னார்கள். அது உண்மை இல்லை என்பதை இந்த உலகமே அறிந்துவிட்டது.

    அதுபோல்தான், எங்களது முதல்வரின் ஆலோசகராக இருக்கும் விஷ்ணு குறித்து, அவரது பெயர் மற்றும் குடும்பத்தாரின் பெயர்களையெல்லாம் சொல்லி, அடிப்படை ஆதாரம் இல்லாமல் உண்மைக்குப் புறம்பான செய்திகளைச் சொல்வதையே முழுநேரத் தொழிலாக வைத்திருக்கிறார்கள். இப்படிச் செய்வது ஏற்புடையது அல்ல.

    Advertisement

    அதையும் சில தொலைக்காட்சிகள், சில செய்தி நிறுவனங்கள், அவர்களுக்கு ஊதுகுழலாகச் செயல்படும் சிலர் அதை எடுத்துத் திரித்து வெளியிடுகின்றனர். உண்மைக்குப் புறம்பாக ஏதேனும் செய்தி நிறுவனங்கள் செயல்பட்டால், அதைத் தொடர்ந்து வெளியிட்டால், சட்டரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இன்று நடந்ததை உலகமே சட்டப்பேரவையில் நடந்ததை பார்த்துவிட்டது. அந்தப் பக்கம் 50 பேர், ஒற்றை ஆள் ஒரு மணி நேரம் பேசியபோது, உண்மையின் சத்தம் என்ன என்று உலகமே தெரிந்தது. திமுக உறுப்பினர்களுக்குச் சபாநாயகர் மூலமாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாங்கள் கூட முதல்வர் பேசும்போது உட்கார்ந்துதான் கேட்டோம். ஆனால் எதிர்க்கட்சியினர் அவர் மீது கொண்ட பக்தியின் காரணமாக நின்றுகொண்டு மரியாதையாகக் கேட்டார்கள். அவர்களுக்கு நன்றி. அவை மாண்பை உடைத்துத் தரையில் வந்து அமர்ந்தனர். இங்கு இடம் நிரம்பிவிடுமா? என்று பார்த்தேன்.. அதற்கும் வாய்ப்பில்லை, அவர்களிடம் அவ்வளவு உறுப்பினர்கள் இல்லை.

    Advertisement

    வேகமாக, சடாரென்று உட்கார்ந்து விட்டார்கள். ஆனால், உட்கார்ந்த அவர்களால் படாரென எழுந்திருக்க முடியவில்லை. அப்போதும்கூட எங்களது முதல்வர்தான் எழுந்து கை கொடுத்து தூக்கிவிட்டார் "தரையில் அமர்ந்த திமுக.. தூக்கிவிட்ட தவெக" என்பதுபோல் இருந்தது அரசியல்! இதெல்லாம் சகஜம்.

    எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் உண்மைக்குப் புறம்பாக சில விஷயங்களைச் செய்வார்கள். ஆனால், தொடர்ச்சியாகத் திட்டமிட்டு அதுபோல் ஏதேனும் செயல்பட்டால், அவர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

    முன்னதாக, சட்டப்பேரவையில் இன்று முதல்வர் விஜய்யின் பொறுப்பில் உள்ள காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்கு அவர் பதில் அளித்தார். அப்போது, திமுகவை கடுமையாக விமர்சித்தார். முதல்வர் விஜய் பதிலுரைக்கு பின்னர் திமுகவினரைப் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்ததால் திமுகவினர் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

    Advertisement

    சபாநாயகர் இருக்கைக்கு முன்பு திமுக எம்.எல்.ஏக்கள் சிலர் அமர்ந்தனர். திமுக சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் திடீரென எழுந்திருக்க முடியாமல் தடுமாறிய போது, முதலமைச்சர் விஜய் அவருக்குக் கைகொடுத்துத் தூக்கிவிட்டார். இதனைக் குறிப்பிட்டே அமைச்சர் ராஜ்மோகன் இவ்வாறு பேசியுள்ளார்.

    English Summary

    “Even we remained seated while Chief Minister Vijay spoke. However, out of reverence for him, the opposition members listened respectfully while standing. I thank them,” Minister Rajmohan said in the Assembly.