சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையரை மாற்றக்கோரும் திசைதிருப்பும் அரசியலுக்கு தவெக இரையாகாது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியின்போது (SIR) தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக நடந்து கொண்டதாக மற்ற தேர்தல் ஆணையர்கள் குற்றம்சாட்டியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
திமுக, காங்கிரஸ், சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் ஆணையரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், தமிழ்நாட்டில் ஆளும் தவெக, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையரைக் கண்டித்து வலிமையான குரலை எழுப்பவில்லை. இது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. நாடு முழுவதும் உள்ள கட்சிகள், குறிப்பாக, தவெக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் நிலவும் குழப்பம் குறித்து விமர்சித்து, தலைமைத் தேர்தல் ஆணையரை மாற்ற வேண்டும் எனக் கூறி வரும் நிலையில், தவெக அமைச்சர் ராஜ்மோகன், "தேர்தல் ஆணையரை மாற்றக்கோரும் திசைதிருப்பும் அரசியலுக்கு தவெக இரையாகாது" எனக் கூறியுள்ளார். அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "SIR-ஐ நாங்கள் எதிர்க்கிறோம். தேர்தல் ஆணையரை தனிநபராக மாற்றினால் மட்டும் பிரச்சனை முடிந்து விடாது. திசைதிருப்பும் அரசியலுக்கு தவெக இரையாகாது. நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தவெக தலைவர் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டார். அதில் தெளிவாக எஸ்ஐஆரை எதிர்க்கிறோம் என பதிவு செய்துள்ளோம். எஸ்ஐஆர் பணிகளில் சீர்திருத்தம் வேண்டும் என்று அப்போதே அவர் கூறியிருந்தார். அதே நிலைப்பாட்டில் தான் நாங்கள் இன்றும் இருக்கிறோம். அரசியலுக்காக போராட்டம் நடத்தி, அறிக்கை விடும் கட்சி தவெக அல்ல. எஸ்ஐஆர் பணிகளின் போது குறிப்பிட்ட வாக்குகள் நீக்கப்பட்டன. அவ்வாறு நடைபெறாமல் இருந்திருந்தால் இன்னும் பெருவாரியான வாக்குகளில் தவெக வெற்றி பெற்றிருக்கும்." எனத் தெரிவித்துள்ளார் ராஜ்மோகன்.