சென்னை: திமுக ஆட்சியில் ரூ 24 கோடியில் கார் ரேஸ் நடத்துனீர்களே அது யார் அப்பா வீட்டு காசு என அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். எம்எல்ஏக்களுக்கு கார் கொடுக்கும் விவகாரம் குறித்த பேச்சின் போது கார் ரேஸ் குறித்த விவாதம் வந்தது.
தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா காலங்களில் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் ஆரோக்கியமான விவாதங்களை நடத்தி வந்தனர். பெரும்பாலான எம்எல்ஏக்கள் சீனியர்கள் என்பதால் கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்றது.
அது போல் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் ஆட்சிக் காலத்திலும் துரைமுருகன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் காமெடியாக பேசி அவையை கலகலப்பாக்கினர். தற்போது ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. அதிமுக, திமுக மாறி மாறி ஆட்சி நடத்திவந்த நிலையில் தற்போது இரு திராவிடக் கட்சிகளை தோற்கடித்துவிட்டு தவெக ஆட்சிக்கு வந்திருக்கிறது. பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இதில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. இன்றைய தினம் சமூகநலத் துறை, போக்குவரத்துத் துறை, மதுவிலக்கு உள்ளிட்ட துறைகளின் மீதான மானியக் கோரிக்கை நடந்தது. அப்போது விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் பேசுகையில், விவசாய கடன் முழுவதும் தள்ளுபடி செய்யவில்லை. மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் எம்எல்ஏக்களுக்கு கார் கொடுத்து என்ன பயன்? மக்களின் வாழ்வாரத்தை முதல்வர் உயர்த்த வேண்டும் என்பதற்காக மக்கள் ஓட்டு போட்டார்கள் என மார்க்கண்டேயன் சொல்லிக் கொண்டிருந்த போது திடீரென எழுந்த அமைச்சர் நிர்மல் குமார், "எம்எல்ஏக்களுக்கு கார் என்ற அறிவிப்பு எப்படி வந்தது என அனைவருக்கும் தெரியும். அதாவது விசிக எம்எல்ஏ கார் குறித்து கேட்டதை அடுத்து முதல்வர் விஜய் அதை பரிசீலனை செய்து அறிவித்தார். காரை எடுத்துக் கொண்டு தொகுதிக்கு செல்ல வேண்டும். தொகுதிகளை சுற்றி வந்து ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு பணி செய்யவே எம்எல்ஏக்களுக்கு கார் கொடுக்கப்படுகிறது. 5 கார், 6 கார் இருந்து என்ன பிரயோஜனம், இதுவரை எங்கள் தொகுதிக்கே எம்எல்ஏ வரவில்லை என்கிறார்கள் என்றார். அப்போது உதயநிதி பேசுகையில், அரசு கஜானாவை திமுக காலி செய்துவிட்டதாக கூறி வரும் நிலையில் கார் வாங்க நிதி எப்படி இருக்கிறது என்பதுதான் கேள்வி என்றார். அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், எம்எல்ஏக்கள் தங்கள் பணிகளை ஆற்றுவதற்கு அரசு சார்பாக வாகனங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. எத்தனை கோடி காரில் போனாலும் அரசு கொடுக்கும் காரில் போகும் போது தனி மரியாதை இருக்கிறது. கார் ரேஸுக்கு 24 கோடி ரூபாய் செலவு செய்தீர்களே, அதெல்லாம் யார் அப்பா வீட்டுக் காசு? என கேள்வி எழுப்பிய போது சட்டசபையில் சலசலப்பு எழுந்தது. உடனே நேரு அவருக்கே உரிய ஸ்டைலில் எழுந்து, என்ன சொன்னீங்க 24.. என கேட்க, கடுப்பான செங்கோட்டையன், கார் ரேஸ் நடத்த 24 கோடி செலவு செய்தீர்களே அது யார் பணத்தில் என கேட்டார். அதற்கு நேரு, உதயநிதி விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தார். வெளிநாடுகளில் நடத்துவது போல் நம் மாநிலத்திலும் அந்த கார் ரேஸை நடத்தினார். இதற்கு நிறைய பேர் பாராட்டினார்கள். நீங்க (செங்கோட்டையன்) கூடதான் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தீர்கள், பதக்கங்களுக்கு 10 கோடி ரூபாய் செலவு செய்தீர்கள். அது யார் வீட்டு பணம், கடைசியில் பதக்கங்களையும் கொடுக்கவில்லையே என கேள்வி எழுப்பினார். அப்போது அமைச்சர் அருண்ராஜ், "திமுக கூடதான் நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறிவிட்டு கருணாநிதிக்கு பேனா சிலை வைக்க கூறியதே" என வினவினார்.