கோவை: அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவு காரணமாக கோவை அவிநாசி சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
லேசான காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டதாகவும் அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செங்கோட்டையன் நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான கே.ஏ.செங்கோட்டையன், விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் வயதில் மூத்த அமைச்சராக உள்ளார். அவருக்கு நிதித் துறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அவரது வேண்டுகோளுக்கிணங்க துறை மாற்றம் செய்யப்பட்டது. தற்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சராக உள்ளார் செங்கோட்டையன். கட்சிப் பணிகள் மற்றும் ஆட்சிப் பணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், இன்று அவருக்கு திடீரென லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, உடனடியாக அமைச்சர் செங்கோட்டையன் கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு பிர்பல தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செங்கோட்டையன் அவர்களுக்கு, அங்குள்ள நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவக் குழுவினர் முதற்கட்டப் பரிசோதனைகளை மேற்கொண்டனர். காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. செங்கோட்டையனின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில் "செங்கோட்டையனுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் இல்லை. லேசான காய்ச்சல் மற்றும் வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் சோர்வு மட்டுமே உள்ளது. சிகிச்சை தற்பொழுது நல்ல பலன் அளித்து வருகிறது. அவரது உடல்நிலை முற்றிலும் சீராக உள்ளதால், நாளையே (திங்கட்கிழமை) அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என்று கூறப்படுகிறது. தமிழக அரசியலில் மிக நீண்ட அனுபவம் கொண்ட மூத்த தலைவரும், தவெக அமைச்சருமான செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பரவியதும், தவெக தொண்டர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சற்றே பரபரப்பும் கவலையும் தொற்றிக்கொண்டது.செங்கோட்டையன் திடீர் உடல்நலக்குறைவு
கோவை மருத்துவமனையில் அனுமதி
நாளை டிஸ்சார்ஜ்?