சென்னை: தமிழக வருவாய்த்துறை அமைச்சரும் தவெக மூத்த தலைவர்களில் ஒருவருமான செங்கோட்டையன், தாராபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, தானும், அமைச்சர் அருண் ராஜ்ஜும் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் ஏமாந்துவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து செங்கோட்டையன் கூறியதாவது:-
எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளராக அருண்குமார் என்பவரை நிறுத்தியதில் நானும் ஏமாந்தேன். அருண்ராஜ்ஜும் ஏமாந்தார். அருண் என்பவர் பெரிய பக்திமான் போல வந்து கையில் கயிற்றை கட்டிக்கொண்டு, பச்சை வேஷ்டி கட்டிக்கொண்டு வந்து, பழனிக்கு நடைபாதையாக போய்விட்டு வந்து உங்க கிட்டத்தான் சீட் கேக்கிறேன் என்றார்.
ஆட்டோவுக்கு பின்னாடி நிற்பது போல போஸ் எல்லாம் கொடுத்தார். ஆனால் கடைசியில் பார்த்தால் சில்லரையை வாங்கிவிட்டு ஓடிப்போய்விட்டார். நான் ஏன் சொல்கிறேன் என்றால், அந்த ஆள் மட்டும் சும்மா நின்றிருந்தால் போதும். எடப்பாடி பழனிசாமி தோற்று இருப்பார். வாக்கே கேட்டு இருக்க வேண்டாம். ஆனால் அதற்கு பிறகு ஒரு சின்னத்தில் இரண்டே நாளில் ஒருவரை நிறுத்தினோம். டிவி சின்னத்தில் நிறுத்தினோம். 58 ஆயிரம் ஓட்டு வாங்கிவிட்டார். 2 நாளில் 58 ஆயிரம் ஓட்டு டிவிக்கு போடுகிறார்கள் என்றால் விசில் சின்னம் கிடைத்து இருந்தால் என்ன ஆகியிருக்கும். எல்லாம் ஒரு நேரம். ஆட்சி மாறும்.. ஓரே ஆண்டு காலத்தில் ஆட்சி மாறும் என்கிறார். எப்படிங்க மாறும். 25 பேர் (அதிமுக எம்.எல்.ஏக்கள்) எங்களுக்கு ஆதரவாக ஓட்டு போட்டுவிட்டார்கள். 6 பேர் ராஜினாமா செய்துவிட்டர்கள். எப்படிங்க மாறும்" என்றார். சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது சேலம் எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து தவெக சார்பில் அருண்குமார் என்பவர் நிறுத்தப்பட்டார். ஆனால் வேட்பு மனு பரிசீலனையின் போது அவர் திடீரென மாயமானதால், அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. மாற்று வேட்பாளராக அவரது மனைவி வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், அவரும் வராததால் இருவரது வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்டது. 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கிய தவெகவிற்கு, எடப்பாடி தொகுதியில் மட்டும் போட்டியிட ஆள் இல்லாமல் போனது. இதனால், சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த கே. பிரேம்குமார் என்பவருக்கு தவெக தனது ஆதரவை அளித்தது. டிவி சின்னத்தில் அவர் களமிறங்கியிருந்தார். இந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமி 1,48, 933 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். டிவி சின்னத்தில் தவெக ஆதரவுடன் சுயேச்சையாக களமிறங்கிய பிரேம்குமார் என்பவர் 50,823 வாக்குகள் பெற்றார். தவெக சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரை அதிமுகவே விலைக்கு வாங்கிவிட்டதாக தவெக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்ற தவெக பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவும், இந்த விவகாரம் குறித்து பேசி எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.2 நாளில் 58 ஆயிரம் ஓட்டு வாங்கிட்டார்
பிரேம்குமார் என்பவருக்கு ஆதரவு