சென்னை: தன்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்துகிறார் என்று கூறி பிரபல யூடியூபர் மாரிதாஸ்க்கு எதிராக ரூ.1 கோடி கேட்டு அவதூறு வழக்கு தொடர அமைச்சர் டிகே பிரபு சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரினார். இதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி அமைச்சர் டிகே பிரபுவின் மனுவை பட்டியலிட அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதனால் யூடியூபர் மாரிதாஸ்க்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய்யின் அமைச்சரவையில் கனிமவளத்துறை அமைச்சராக இருப்பவர் டிகே பிரபு. இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் போட்டியிட்ட நிலையில் அவர் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டார். சீமானை எதிர்த்து வெற்றி பெற்றதால் டிகே பிரபு மிகவும் பிரபலமானதோடு, அவரை அமைச்சராக்கினார் முதல்வர் விஜய். இந்நிலையில் தான் தான் பிரபல யூடியூபர் மாரிதாஸ் தன்னை பற்றி அவதூறு பரப்புவதாகவும், அவரிடம் ரூ.1 கோடி கோரி அவதூறு வழக்கு தொடர தனக்கு அனுமதி வேண்டும் என்றும் அமைச்சர் டிகே பிரபு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. இந்த மனுவை நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி விசாரித்தார். அப்போது யூடியூபர் மாரிதாஸிடம் ரூ.1 கோடி கோரி அவதூறு வழக்கு தொடர அனுமதி வழங்கினார். இதுதொடர்பாக அமைச்சர் டிகே பிரபுவின் மனுவிற்கு எண் வழங்கி விசாரணைக்கு பட்டியலிட நீதிமன்ற பதிவகத்துக்கு உத்தரவிட்டார். இதனால் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இது யூடியூபர் மாரிதாஸ்க்கு சிக்கலாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மனுவின் பின்னணி பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. அதாவது அமைச்சர் டிகே பிரபுவின் மருத்துவமனைக்கு எதிராக காரைக்குடியில் சுமார் 2.75 ஏக்கர் நிலம் உள்ளது. இது கோவில் நிலமாகும். அமைச்சராக டிகே பிரபு பொறுப்பேற்ற பிறகு அந்த நிலம் அவசரஅவசரமாக கைமாற்றப்பட்டுள்ளது. இந்த நிலம் கைமாறியதன் பின்னணியில் அமைச்சர் டிகே பிரபு உள்ளதாக கூறி யூடியூபர் மாரிதாஸ் தனது யூடியூப் சேனலில் பேசினார். அதுமட்டுமின்றி அந்த வீடியோவை தனது சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார். இந்த வீடியோ அதிக கவனம் பெற்றது. இந்நிலையில் தான் ஆதாரமற்ற, அவதூறான குற்றச்சாட்டுகளை யூடியூபர் மாரிதாஸ் கூறுவதாக அமைச்சர் டிகே பிரபு தரப்பு கூறியது. இதுதொடர்பாக தான் அமைச்சர் டிகே பிரபு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் யூடியூபர் மாரிதாஸ்க்கு எதிராக ரூ.1 கோடி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ''யூடியூபர் மாரிதாஸ் தவறான தகவல்களுடன் என் மீது முறைகேடு புகார்களை கூறி வருகிறார். இதுதொடர்பான வீடியோ வெளியிட்டு எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது எனது புகழுக்கும் களங்கம் விளைவிப்பதோடு, மனஉளைச்சலை தருகிறது. இதனால் அவரிடம் ரூ.1 கோடி பெற்று தர வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.