சென்னை: தமிழக சட்டசபையில் தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டசபை தொகுதியின் அதிமுக எம்எல்ஏ 'தாழ்த்தப்பட்டவர்' என்ற வார்த்தையை பயன்படுத்தி பேசினார். இதற்கு விசிகவை சேர்ந்த அமைச்சர் வன்னியரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையாற்றினார். அதன்பிறகு இன்று 2வது நாள் சட்டசபை அமர்வு தொடங்கியது. மறைந்த அரசியல் மற்றும் திரை பிரபலங்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பிறகு மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதை எதிர்க்கும் தனி தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார். இதற்கு அனைத்து கட்சி எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தமிழக ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எம்எல்ஏக்கள் பேசினர். தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டசபை தொகுதியின் அதிமுக எம்எல்ஏ சம்பத் குமார் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். அப்போது அவர் ஒரு இடத்தில் ''தாழ்த்தப்பட்டவர்'' என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறுக்கீடு செய்து 'தாழ்த்தப்பட்டவர்' என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம் என்று கூறினார். அதன்பிறகு விசிகவின் எம்எல்ஏவும், சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னியரசு எழுந்து பேசினார். அவர், ''தாழ்த்தப்பட்டவர்'' என்ற வார்த்தையை அதிமுக எம்எல்ஏ சம்பத் குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதுபற்றி அமைச்சர் வன்னியரசு பேசும்போது, '' விடுதலை சிறுத்தைகள் கட்சி தலித் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறது. தலித் எனும் வார்த்தை இந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைக்க பயன்படுகிறது. தலித் ஒற்றுமையைதடுக்க பாஜக அரசு பட்டியலின மக்கள் அரசாணையை வெளியிட்டது. தற்போது தமிழக சட்டசபையில் கூட்டணி ஆட்சி என்ற நடைமுறை வந்துள்ளது. காங்கிரஸ் விஸ்வநாதனும், நானும் அமைச்சர்களாகி உள்ளோம். இப்படி இருக்கும்போது அந்த வார்த்தையை (தாழ்த்தப்பட்டோர்) பயன்படுத்த கூடாது. மேலும் அதனால் மட்டுமே தலித்துகளின் பிரச்சனை முடிந்து விடாது. தமிழ்நாட்டில் நடக்கும் ஜாதிய வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.