சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது பண்டிகைக்கு பிறகு மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் எச்சரித்துள்ளார். விதிகளை மீறி செயல்படும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆம்னி பேருந்துகளின் கட்டண வசூலை முறைப்படுத்த பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றே தீபாவளி பண்டிகையை கொண்டாடுவார்கள். சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அது முழுமையாக தேவையை பூர்த்தி செய்யாது. இதனால் பல ஆயிரம் பயணிகள் பேருந்துகள் மூலமாகவே செல்வார்கள்.
இருப்பினும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் எப்போதும் ஆம்னி பஸ் கட்டணம் உச்சத்தில் இருக்கும். அரசு இது தொடர்பாக எச்சரிக்கை விடுப்பதும் இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் அதிகமாக இருப்பதும் தொடர்கதையாகவே இருக்கிறது. இதற்கிடையே இந்தாண்டு தீபாவளி சமயத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம் என அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், "தீபாவளி சமயத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது தீபாவளிக்கு பிறகு மிக கடுமையான நடவடிக்கை எடுப்போம். பண்டிகைக்கு இன்னும் இரண்டு, மூன்று நாட்களே உள்ள நிலையில், அரசால் முடிந்தவரை ஆம்னி பேருந்துகளின் கட்டண வசூல் கட்டுப்படுத்தப்பட்டு முறைப்படுத்தியுள்ளோம். மேலும், பேருந்து உரிமையாளர்களுக்கு இறுதிக்கட்ட எச்சரிக்கை விடுத்துள்ளோம். விதிகளை மீறிய சில பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து உரிமையாளர்களை நேரில் அழைத்து அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு பிறகும் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால், தீபாவளி முடிந்ததும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆம்னி பேருந்துகளுக்கு இதுவரை தமிழக அரசின் ஒப்புதலுடன் எந்த கட்டண பட்டியலும் வெளியிடப்படவில்லை. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில்தான் கட்டண பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு இடையிலேயே கட்டண நிர்ணயத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்ததால், அவர்கள் தங்களுக்குள் ஆலோசித்து இந்த பட்டியலை வெளியிட்டுள்ளனர். மேலும், அனைத்து ஆம்னி பேருந்துகளும் அதிக கட்டணம் வசூலிக்கிறது என சொல்லிவிட முடியாது. ஒரு சில பேருந்துகள் செய்யும் தவறுகளால் ஒட்டுமொத்த ஆம்னி பேருந்து துறைக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.. இதனால்தான் உரிமையாளர்களிடம் அரசு திட்டவட்டமாகவும் கண்டிப்புடனும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பயணிகள் பாதிக்கப்படாத வகையில் நியாயமான கட்டணத்தை உறுதி செய்வதே அரசின் நோக்கம். தீபாவளிக்கு பிறகு முறையான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்" என்றும் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.தீபாவளி
முறைப்படுத்துவோம்
இறுதிக்கட்ட எச்சரிக்கை
சீரமைப்பு பணிகள்