“அமைச்சர் பதவி வாங்கித் தரேன்..” ஆதவ் அர்ஜுனா பெயரில் மோசடி.. போலி இமெயில்.. சிக்கிய 2 பேர்!

  • சென்னை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெயரில் போலி மின்னஞ்சல் கணக்கைத் தொடங்கி அமைச்சர் பதவி வாங்கித் தருவதாக ரூ.8 கோடி பேரம் பேசி மோசடி செய்ய முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    தமிழக பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெயரில் போலி மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட முயன்றதாக சென்னை வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் நிஸ்வாக் என்பவர் புகார் அளித்திருந்தார்.

    Advertisement

    அந்த புகார் மனுவில், "அமைச்சர் பெயரில் போலி மின்னஞ்சல் கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது. அதனை உருவாக்கி நபர் தன்னை வெங்கடேஷ் என அறிமுகப்படுத்திக் கொண்டு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டார். போலி மின்னஞ்சல் கணக்கைப் பயன்படுத்தி போலியான மின்னணு ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தவறான தகவல்கள் அனுப்பப்பட்டு ஏமாற்றும் வகையில் செயல்பட்டுள்ளனர்.

    அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெயரைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட மோசடியில் வெங்கடேஷ் மட்டுமின்றி மேலும் சிலர் இருக்கின்றனர். கூட்டாக இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கலாம். எனவே, சம்மந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்து இருந்தார்.

    Advertisement

    இந்தப் புகாரின் அடிப்படையில் வில்லிவாக்கம் போலீசார் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெயரில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் போலி மின்னஞ்சல் கணக்குகளையும் ஆய்வுச் செய்தனர். மேலும், போலி மின்னஞ்சல் கணக்குகளை உருவாக்கியது யார்? குற்றம்சாட்டப்பட்ட வெங்கடேஷுடன் தொடர்புடையவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டதில், கடந்த ஜூலை மாதம் வேலூரைச் சேர்ந்த ரூபன் ராஜ் மற்றும் சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சக்தி அர்ஜுன் ஆகிய இருவரும் வெங்கடேஷுக்கு தெரிந்த தயாளன் என்பவரிடம், தங்களுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைத் தெரியும் என்றும், ரூபாய் 8 கோடி கொடுத்தால் வேலூர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ வினோத் கண்ணனுக்கு அமைச்சர் பதவி வாங்கித் தர முடியும் என்று கூறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    Advertisement

    இதனை நம்பிய தயாளன், இந்த தகவலை வெங்கடேஷ் மூலமாக வேலூர் எம்.எல்.ஏ வினோத் கண்ணனின் அலுவலகத்திற்கு தெரிவித்துள்ளார். இதனிடையே, ரூபன் ராஜ் தனது லேப்டாப்பில் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பெயரில் போலியான மின்னஞ்சல் கணக்கை உருவாக்கி, அதிலிருந்து வந்த உறுதிப்படுத்தல் செய்தியை போனில் 'ஸ்கிரீன்ஷாட்' எடுத்து வெங்கடேஷ் மூலம் வாட்ஸ்அப்பில் அனுப்பி நம்ப வைத்துள்ளார்.

    இதனால் சந்தேகமடைந்த வேலூர் எம்.எல்.ஏ வினோத் கண்ணன், இந்த நபர்களிடம் குரூப் வீடியோ காலில் பேசும்போது ஆள்மாறாட்டம் செய்யப்பட்டதும், போலி மின்னஞ்சல் தயாரிக்கப்பட்டு ஏமாற்றி பணம் பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    இதையடுத்து வில்லிவாக்கம் தனிப்படை போலீசார், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரூபன் ராஜ், சென்னை திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த சக்தி அர்ஜுன் ஆக இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ஒரு லேப்டாப் மற்றும் இரண்டு செல்போன்களையும் பறிமுதல் செய்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

    பின்னர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் இருவரையும், காவல்துறை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்த இருப்பதாகவும், இவர்கள் இதேபோன்று வேறு யாரிடமாவது மோசடி செய்தார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    English Summary

    Police have arrested and are interrogating two individuals who attempted to commit fraud by creating a fake email account in the name of Minister Aadhav Arjuna and negotiating a deal worth ₹8 crore, promising to secure a ministerial post.