கர்நாடகா போகாதீங்க.. விஷப் பரீட்சை! சதி வலையில் சிக்கிக்கொள்ளக் கூடாது.. விஜய்க்கு ஸ்டாலின் அட்வைஸ்

  • சென்னை: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கர்நாடகா சென்று முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் கர்நாடகா போகாதீங்க என முதல்வர் விஜய்க்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மேலும், 'இது விஷப் பரீட்சை எனவும், சதி வலையில் சிக்கிக்கொள்ள கூடாது' என்றும் கூறியுள்ளார்.

    Advertisement

    தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் காவிரி நதி நீரை பங்கீட்டு கொள்வதில் நீண்ட காலம் பிரச்சினை நிலவுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா, தமிழ்நாட்டிற்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும்.

    Advertisement

    மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக முயற்சி

    ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை மதிக்க மறுக்கும் கர்நாடகா, தமிழகத்திற்கு உரிய நீரை வழங்குவது இல்லை. இது ஒருபக்கம் இருக்க மேகதாதுவில் அணை கட்டவும் கர்நாடகா முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடகாவின் முயற்சிகளை அனைத்து வழிகளிலும் தடுக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

    இதற்கிடையே, காவிரி நதிநீர் பேச்சுவார்த்தைக்காக வருகிற ஆகஸ்டு 3 ஆம் தேதி பெங்களூருக்கு நேரில் வருமாறு விஜய்க்கு, டிகே சிவக்குமார் கடிதம் எழுதி இருக்கிறார். போதிய மழை பெய்யாத சூழ்நிலையில் வறட்சி கால முறைப்படி காவிரி நீரை பங்கீட்டு கொள்வது குறித்து பேசவும், மேகதாது அணை குறித்து பேசி சுமூக தீர்வு காணலாம் என்பதற்காகவும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

    Advertisement

    கர்நாடகா போக வேண்டாம்

    கர்நாடக அரசின் அழைப்பை ஏற்று விஜய் வரும் 3 ஆம் தேதி பேச்சுவார்த்தைக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. டிகே சிவகுமார் அழைப்பை ஏற்று கர்நாடகா செல்ல இருப்பதாக அமைச்சர் வினோத்தும் கூறினார். காவிரி விவகாரத்தில் நீதிமன்றம் வழியாக தீர்வு காண முடியும் என்றும் பேச்சுவார்த்தை என்ற வலையில் சிக்கி கொள்ள வேண்டாம் என விஜய்க்கு அரசியல் கட்சிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க ஸ்டாலினும் விஜய் கர்நாடகா செல்ல எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-

    Advertisement

    விஜய் கைவிட வேண்டும்

    காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை என்னும் சதிவலையில் தமிழ்நாடு முதல்வர் விஜய் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!.. நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.

    இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.! கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல்.

    அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.. பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை முதல்வர் விஜய் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார். முன்னதாக பாமக தலைவர் அன்புமணியும் முதல்வர் விஜய் கர்நாடகா செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English Summary

    MK Stalin advice to CM Vijay: Reports emerged that Chief Minister Vijay was planning to visit Karnataka to hold talks regarding the Mekedatu dam issue. Amidst this, DMK leader Stalin has advised Chief Minister Vijay not to visit Karnataka.