சென்னை: திமுக விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவோரை வேட்டையாடுவதா? என்றும், தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல எனவும் கூறியுள்ளார். இது குறித்து மு.க ஸ்டாலின் கூறியிருப்பதாவது:-
ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இணைய ஆதரவாளர்கள் என அனைவரையும் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது Take Diversion Model த.வெ.க. அரசு. "அவதூறு வழக்குகளில் கூட எதற்குத் தொடர்பில்லாத குற்றப்பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?" என நீதிமன்றத்திடம் சமீபத்தில்தானே குட்டு வாங்கினீர்கள்? கைது செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டுள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்கச் சென்றவர்களும் தடுக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும்கூட மறுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்? ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல! சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences" என்று கூறியுள்ளார். முன்னதாக திமுக எம்பி கனிமொழியும் இந்த விவகாரத்தில் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். தவெக அரசின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.. தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும் என கனிமொழி கூறியிருந்தார். முதல்வர் விஜய்யை மிரட்டும் தொனியில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் பேசியதாக தவெகவினர் கொடுத்த புகாரின் பேரில் விளாத்திக்குளம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து இன்று காலையில் அவரை கைது செய்தனர். தொடர்ந்து தூத்துக்குடி எஸ்பி ஆபிசில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் தான் விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்வதா என திமுக கண்டனம் தெரிவித்து வருகிறது.
மு.க ஸ்டாலின் கண்டனம்சட்ட ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா?