பதவி இழக்கப்போகிறவர்களுக்கு ‘பூஸ்ட்’ கொடுத்த ஸ்டாலின்! வேறு பொறுப்பு தேடி வருமாம்!

  • சென்னை: "வயது வரம்பு மற்றும் ஒருவர் அதிக முறை பதவியில் இருக்க முடியாது என்ற வரம்புகள் காரணமாக பொறுப்புகளை இழப்பவர்கள் யாரையும் கைவிடமாட்டேன். அவர்கள் அனைவருக்கும் அவர்கள் தகுதிக்கேற்ற வேறு பொறுப்புகளை வழங்கும் வகையில் முடிவெடுப்பேன்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

    Advertisement

    திமுகவில் 110 மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதற்கு வசதியாக தொகுதிகளை பிரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், 3 முறைக்கு மேல் மாவட்ட செயலாளராக இருக்க முடியாது, 70 வயதுக்கு மேல் மா.செவாக இருக்க முடியாது என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால், பலரது பதவிகள் பறிபோக உள்ளன.

    Advertisement

    இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மறுசீரமைப்பு தலைமைக் கழக பிரதிநிதிகள் கூட்டம் இன்று மாலை, வீடியோ கான்பரஸ் வாயிலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைமையால் மாவட்ட வாரியாக நியமனம் செய்யப்பட்ட தலைமைக் கழக பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்றனர்.

    இந்தக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "நாட்டிலேயே முதன்முதலில் ஆட்சியைக் பிடித்த மாநிலக் கட்சி - சாதனைகள் பல படைத்த கட்சி என்ற பெருமை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கிறது. அதற்குக் காரணம், அப்படியே தேங்கி நின்றுவிடாமல், காலத்திற்கு ஏற்ற மாதிரி நாம் அப்டேட் ஆகி - அப்கிரேட் ஆவதுதான்.

    Advertisement

    "மாற்றங்கள் நம்மிலிருந்துதான் தொடங்க வேண்டும்" என்று சொல்லி, DMK 2.0-விற்கான பயணத்தை இப்போது நாம் தொடங்கியிருக்கிறோம்.
    நடந்து முடிந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்து, வெற்றிப் பாதைக்கு நாம் திரும்ப வேண்டும் என்று பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

    முதலில், கள ஆய்வுக் குழுவை அனுப்பி, நிர்வாகிகளிடம் கருத்து கேட்டோம். ஆன்லைனில் தொண்டர்களிடம் கருத்து கேட்டோம். அதில் வந்த அறிக்கையையெல்லாம் நான் முழுமையாகப் படித்தேன். அதில் வந்த கருத்துகளின் அடிப்படையில், கழகத்தின் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புகளைப் பரிந்துரை செய்ய, கழக மறுசீரமைப்புக் குழுவை அமைத்தோம்.

    Advertisement

    அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், செயற்குழுவில் பல்வேறு தீர்மானங்களைக் கொண்டு வந்தோம். அதன் தொடர்ச்சியாக, கடந்த 28-ஆம் தேதி 110 மாவட்டங்களை அறிவித்தோம். இந்தச் செயல்பாட்டின் அடுத்த கட்டப் பணியைச் சிறப்பாகச் செய்ய நேற்று முன்தினம், தலைமைக் கழகப் பிரதிநிதிகளாக உங்கள் அனைவரையும் அறிவித்திருக்கிறோம்.

    கழக மறுசீரமைப்புக்கான தலைமைக் கழகப் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டிருக்கின்ற நீங்கள், என்னுடைய கண்களாகவும் - காதுகளாகவும் மாவட்டங்களுக்குச் சென்று, எந்தவித பாகுபாடுகளும் பார்க்காமல் - எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல், கொடுக்கப்பட்டிருக்கின்ற பணிகளைச் சரியாகச் செய்துவிட்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    Advertisement

    நீங்கள் அனைவரும் உங்களுக்குப் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்ற மாவட்டங்களுக்குச் சென்று, மாவட்டச் செயற்குழுக் கூட்டத்திற்கு முன்னிலை வகித்து, அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு, மறுசீரமைப்புக் குழு வகுத்துத் தந்துள்ள வழிமுறைகளின்படி கழக அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

    முக்கியமாக நீங்கள் சென்று முதலில் சொல்ல வேண்டியது என்னவென்றால், "கிளை முதல் தலைமை வரைக்குமான பொறுப்புகளுக்குத் தேர்தல்தான் நடக்கப்போகிறது என்று தலைவர் சொல்லிவிட்டார். அது அனைத்துமே சுதந்திரமான - நேர்மையான தேர்தலாகத்தான் நடைபெறும். அப்போதுதான் புதிய நிர்வாகிகள், இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வருவார்கள். அதற்கு நீங்கள் தான் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் நாம் அனைவரும் சேர்ந்து பாடுபட்டு வளர்த்த கட்சியை, அடுத்த நூறு ஆண்டுகளுக்குக் கொண்டு செல்ல முடியும்" - என்று சொல்ல வேண்டும்.

    Advertisement

    அதேபோல், செயற்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களின் அடிப்படையில், வயது வரம்பு காரணமாகவும் - ஒருவர் எத்தனை முறை பதவியில் இருக்கலாம் என்ற வரம்பு காரணமாகவும் பலருக்கும் இப்போது இருக்கும் பொறுப்புகள் பறிபோகும்.

    "அவர்கள் யாரையும் தலைவர் கைவிடப் போவதில்லை. அவர்கள் அனைவருக்கும் அவர்கள் தகுதிக்கேற்ற வேறு பொறுப்புகளை வழங்கும் வகையில் தலைவர் முடிவெடுப்பார்" என்பதையும் மாவட்டச் செயற்குழு கூட்டங்களில் எடுத்துச் சொல்லுங்கள்.

    வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி கழக அமைப்புகள் பிரிக்கப்படுவதை உறுதி செய்து, அனைவரின் ஒப்புதலையும் பெற்று தலைமைக் கழகத்தில் ஒப்படைக்கும் பணியை அடுத்த 15 நாட்களில் விரைந்து முடித்துத் தர வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இதையெல்லாம் நீங்கள் செய்து முடித்த பிறகுதான் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்க முடியும்.

    அடித்தளம் வலிமையாக இருந்தால்தான் கட்டிடம் உறுதியாக இருக்கும். வேர்கள் வலிமையாக இருந்தால்தான் ஆலமரம் உறுதியாக நிற்கும். அதுபோல நம்முடைய கழகக் கட்டமைப்புதான் நம்மைத் தாங்கி நிற்கும். அந்த ஆணிவேரைப் பலப்படுத்தும் பெரும்பொறுப்பு உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

    இன்றைக்கு காலையில் மறுசீரமைப்புக் குழுவின் வழிகாட்டு நெறிமுறைகள் தலைமைக் கழகத்தின் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். அதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் தங்கம் தென்னரசு அவர்களிடம் கேளுங்கள்.

    கொள்கை அற்ற, கட்டமைப்பு அற்ற கட்சிகள் வரும் - போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது; சூரியன்தான் நிரந்தரம்! நிலைத்து நிற்கும்!

    கட்டமைப்பைப் பலப்படுத்தி, கொள்கைப் பயணத்தைத் தொடர்வோம்! இன்று நாம் செய்யும் பணிகள் நாளை வரலாறாய் நிலைத்து நிற்கும்! கழகத்தை மறுசீரமைப்போம்! மீண்டு வருவோம்! மீண்டும் வெல்வோம்!" எனப் பேசியுள்ளார்.

    English Summary

    “I will not abandon anyone who loses their responsibilities. I will make decisions to assign them other roles suited to their qualifications,” DMK leader MK Stalin has assured.