சென்னை: விஜய் தலைமையிலான தவெக ஆட்சியில் சட்ட ஒழுங்கு, மின்வெட்டு என அனைத்து நிலைமைகளும் மிக மோசமாக இருப்பதாக விமர்சித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், இதற்கெல்லாம் அங்கிள் விஜய் பதில் சொல்லியே தீர வேண்டும் என விமர்சித்துள்ளார். மேலும், ரெய்டிற்கு எல்லாம் திமுக அஞ்சாது எனவும் அவர் தெரிவித்தார்.
கோவையில் திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் அறிவுலகம் திறப்பு விழா மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தவெக அரசு மற்றும் முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளை மிகக் காட்டமாக விமர்சித்துப் பேசினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், "திராவிட மாடல் ஆட்சியில் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், கோவையில் பெரியார் அறிவுலகம், திருச்சியில் காமராஜர் நூலகம் என அமைத்தோம். தொடர்ந்து நெல்லையில் காயிதே மில்லத், கடலூரில் அஞ்சலை அம்மாள், சேலத்தில் பாரதிதாசன் பெயர்களில் நூலகங்கள் அமைக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் அந்தத் திட்டங்களையெல்லாம் ரத்து செய்து மூடுவிழா நடத்த பார்க்கிறார்கள். கோவை பெரியார் அறிவுலக பணிகளில் 99 சதவீதத்தை நாங்கள் முடித்துவிட்ட காரணத்தினால்தான், வேறு வழியின்றி ஜோசியர் சொன்ன தேதியை பார்த்து ஒப்புக்கு வந்து திறந்து வைத்திருக்கிறார்கள். முதலமைச்சர் என்ன உடை அணிய வேண்டும், அலுவலகம் எங்கு அமைய வேண்டும், நெற்றியில் என்ன பொட்டு வைக்க வேண்டும் என்பதையெல்லாம் ஜோசியர்தான் தீர்மானிக்கிறாரா? முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் 'பவர் சென்டரே இருக்காது' என்றார். ஆனால், இன்று முதலமைச்சரையே பொம்மையாக்கிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் கார்ப்பரேட் பவர் சென்டர்கள்தான் இந்த ஆட்சியை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்சனை வந்துவிட்டது. திமுக ஆட்சியில் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட மின்சார ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு, வெளிச்சந்தையில் இருமடங்கு அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை நியாயப்படுத்துவதற்காகவே இந்தச் செயற்கையான மின்வெட்டு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். மின்மயானங்களில் கூட உடல்களை எரிக்க முடியாமல் மின்வெட்டால் மக்கள் தவிக்கிறார்கள். குற்றவாளிகளைப் பிடிக்க வக்கில்லை; சிறையில் உள்ள கைதிகள் தப்பித்து ஓடுகிறார்கள். 30 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேரத்தில் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பி ஓடியதுதான் இந்த அரசின் சாதனையா? புழல் சிறையில் இரு கைதிகள் தப்பித்தார்கள்; கோவையில் தப்பித்த குற்றவாளி மீண்டும் தப்பித்து ஓடியுள்ளார். ஃபைலைத் திறப்போம் என்று கூறிவிட்டு இப்போது ஜெயிலை திறந்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்! காலையில் 10 மணிக்கு வந்துவிட்டு 5 மணிக்குக் கிளம்பிச் செல்வதற்கும், சனி ஞாயிறு விடுமுறை எடுப்பதற்கும் இது ஒன்றும் 10 To 5 ஆபீஸ் வேலை கிடையாது. முதலமைச்சர் விஜய் அவர்களே... அங்கிள் விஜய் அவர்களே... முதலமைச்சர் பதவி என்பது சினிமா படப்பிடிப்புக்குக் கால்ஷீட் கொடுத்துவிட்டு செட்டுக்கு வந்து வேஷம் போட்டுவிட்டு போகிற வேலை அல்ல! முழுமையாகத் தன்னை ஒப்படைத்து மக்கள் பணியாற்ற வேண்டும். இடைத்தேர்தல் வரும் திருச்சியில் நேரு வீட்டில் திரும்ப திரும்ப ரெய்டு விடுகிறார்கள். இத்தகைய மிரட்டல்களுக்கெல்லாம் திமுக ஒருபோதும் அஞ்சாது; அழுத்த அழுத்தத்தான் பந்து போல மேலே எழுவோம்! ஐந்து ஆண்டுகளில் அடைய வேண்டிய அவமானத்தை அஞ்சே மாதங்களில் வாங்கிவிட்டு, வெட்கமே இல்லாமல் 'வெற்றித் தமிழன்' என்று தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்" என்று கடுமையாக சாடினார்.ஸ்டாலின்
மின்வெட்டு
உங்களுக்கு கட்சி – அரசியல் எல்லாம் தேவையில்லை – விருது பெற்ற மாணவர்களிடம் நேரடியாக சொன்ன விஜய்
அங்கிள் விஜய்
திமுக அஞ்சாது