சும்மா விடக்கூடாது”- கர்நாடக வனத்துறை என்கவுண்டரில் 3 தமிழர்கள் பலியான சம்பவத்தால் கொதித்த ஸ்டாலின்

  • சென்னை: கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு, கர்நாடக அரசுக்கு தனது கண்டனத்தைப் பதிவுச் செய்ய வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    Advertisement

    கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் ஹனூர் வனப்பகுதியில் வேட்டையாடுபவர்கள் எனக்கூறி நேற்று காலை வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து அவர்களது உறவினர்கள், கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்கள் வேட்டையாடுபவர்கள் அல்ல என்றும், மாடுகளை தேடிச் சென்ற அப்பாவிகள் என்றும் கிராம மக்கள் தெரிவித்திருந்தனர்.

    Advertisement

    போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களிடம் ஹனூர் எம்.எல்.ஏ மஞ்சுநாத் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, என்கவுன்ட்டர் செய்த வனத்துறை அதிகாரிகள் மீது உடனடி பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்படும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மூன்று தமிழர்களின் குடும்பங்களுக்கு கர்நாடகா அரசின் சார்பில் தலா ரூபாய் 5 லட்சமும், ஹனூர் எம்.எல்.ஏ. மஞ்சுநாத்தின் சொந்த நிதியில் இருந்து ரூபாய் 10 லட்சமும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

    சம்பந்தப்பட்ட வனத்துறையினரை பணி நீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என இறந்தவர்களின் உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர். கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு திமுக, பாமக, தவாக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

    Advertisement

    முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது.

    குற்றம் இழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது. அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது.

    Advertisement

    மேகதாது விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு, கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்திட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

    English Summary

    DMK leader MK Stalin has condemned the incident in which three Tamils ​​were shot dead in the Karnataka forest area. Stalin has also urged the Tamil Nadu government to register its condemnation with the Karnataka government.