சென்னை: கண்துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, முதுகில் குத்தும் த.வெ.க. அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள்தான் தற்போதைய இரையா? பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களைக் காவல்துறையைக் கொண்டு கைது செய்த த.வெ.க. அரசின் அராஜக நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
காலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை இரவில் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் மேலும் கூறுகையில், "போராடும் செவிலியர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திட மனம் வராத துரோக த.வெ.க. அரசுக்கு, ஈவு இரக்கமின்றி அவர்களைக் கைது செய்ய மட்டும் எப்படி மனம் வந்ததோ?
போராடிய செவிலியர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கைது செய்ததாக அவர்களது சட்ட ஆலோசகரே குற்றம்சாட்டியிருக்கிறார். தொடர்ந்து, போராட்டக் களத்திலிருந்த செவிலியர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு; தேர்தல் வந்தபோது பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி; ஆட்சிக்கு வந்ததும் அதே கோரிக்கையை முன்வைத்தால் காவல்துறை நடவடிக்கை! முரண்பாட்டு மூட்டையாக விளங்கும் முதலமைச்சர் விஜயும், அவரது நிர்வாகத் திறனற்ற துக்ளக் நடவடிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் அதிமேதாவி அமைச்சர்களும் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்? போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த செவிலியர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாகக் கைது செய்ததுதான் த.வெ.க. கூறும் 'மாற்றமா'? இதுதான் அவர்கள் போற்றும் ஜனநாயகமா? போராடிய செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவரே விரலை உயர்த்தி "வேண்டாம் உங்க உயிர் முக்கியம்" என மிரட்டியதுதான் ஜனநாயக வில்லனின் குரலா என்பதைக் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விளக்குவாரா? அல்லது, செவிலியர்களை மிரட்டி குண்டுகட்டாகக் கைது செய்த பெண் காவலர்களின் செயலை "சிங்கப்பெண் இன் ஆக்சன்" என ரில்ஸ் செய்து தனது வெர்சுவல் அபூசர்கள் மூலம் டிரெண்ட் செய்து விளம்பரம் தேடுவாரா?"இவ்வாறு கூறியுள்ளார். முன்னதாக நேற்று காலை தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் சங்கத்தினர் சார்பில் பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள். தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் செவிலியர்களுக்கு ஆதரவாக, திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார். அவர் மேடையில் இருக்கும் போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்த போது எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை. இன்றைய முதல்வர் விஜய் எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று குரல் எழுப்பினார்கள். செவிலியர் சங்கத்தின் தலைவர் சுந்தரி பேசுகையில், "இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு வழங்க வேண்டும். மாதம் ரூ.21,000 ஊதியத்தில் எப்படி வாழ்க்கையை நடத்த முடியும். கடந்த 2023 முதல் ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. மற்ற மாநிலங்களுக்கு இணையாக ரூ.45,000 ஊதியம் வழங்க வேண்டும். இடைநிலை சுகாதார செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். தவெக தேர்தல் வாக்குறுதி அளித்தபடி, ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று கூறியிருந்தார். ஆனால் போராடத்தில் ஈடுபட்டவர்கள் நேற்று மாலையே கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.