சென்னை: தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவரது கணவர் கோவையில் தாராபுரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது? என திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான முக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டவர். கார்த்திகா மற்றும் அவரது கணவர் கோவையில் வைத்து தாராபுரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இடைத்தேர்தலின் போது, அனுமதியின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டது, முதலமைச்சர் மற்றும் தவெக தலைவர் விஜய் ஆகியோர் சென்ற பாதைகளில் தேர்தல் விதிமுறைகளை மீறியது மற்றும் காவல் நிலைய முற்றுகைப் போராட்டம் நடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கார்த்திகா மற்றும் நாதகவினர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கார்த்திகாவின் கைது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கார்த்திகாவுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழக வெற்றிக்கழக அரசை கண்டித்து இருக்கிறார் முன்னாள் முதல்வரும் திமுக தலைவர் ஆன மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," நடந்து முடிந்த தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலின்போது தொடரப்பட்ட வழக்கு காரணமாக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமதி கார்த்திகா அவர்களைத் த.வெ.க. அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் பொதுவாழ்க்கையில் ஈடுபடுவதை, கொள்கை மாறுபாடுகளுக்கு அப்பால் வரவேற்று ஊக்கமளிக்க வேண்டும். அத்தகையோரைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலமாக இந்த அரசு எதைச் சாதிக்கப் போகிறது? கடந்த காலங்களில் திருமதி கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது. இடைத்தேர்தலில் த.வெ.க. அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததை நாடே பார்த்தது. அதைத் தட்டிக் கேட்டதற்காக நா.த.க. நிர்வாகிகளைக் கைது செய்து அலைக்கழிப்பது கொடுங்கோன்மையும் குறுகிய மனப்பான்மையும் ஆகும். ஜாமீனில் வெளிவரத்தக்க சாதாரண வழக்குகளுக்காக, கைது நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றக் கண்டனத்துக்கு ஆளாவார்கள். த.வெ.க.வின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்குக் காவல்துறை அதிகாரிகள் துணைபோகக் கூடாது. நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. மறுபுறம், செய்தியாளர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்தவர்களும், கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குத் துணைபோனவர்களும் த.வெ.க.வில் இருப்பதாலேயே வெளியில் சுற்றித் திரிகிறார்கள். குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது. திருமதி கார்த்திகா அவர்களையும் அவரது கட்சியினரையும் நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்!" எனக் கூறியுள்ளார்.கார்த்திகா கைது
முக ஸ்டாலின்
நாதக கார்த்திகா
த.வெ.க. அரசு
போதை மருந்து கடத்தல்
டெல்லி பா.ஜ.க