சென்னை: "மின் கொள்முதல் செய்வதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது, யார் யார் இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும்" என திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தொடங்கி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான மின்சார தட்டுப்பாட்டை அடுத்து மின் தேவையை சமாளிக்க வெளிச் சந்தையில் குறு கால அடிப்படையில் மின்சாரத்தை வாங்க தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் திட்டமிட்டது.
4,500 மெகாவாட் மின்சாரத்தை வெளிச் சந்தையில் கொள்முதல் செய்ய கடந்த வாரம் டெண்டர் கோரியது மின்சார வாரியம். ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் வகையில் டெண்டரை இறுதி செய்து ஒப்பந்தம் செய்தது தமிழக மின் வாரியம். தமிழ்நாடு மின்சாரத் துறை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உச்ச விலையில் வெளிச் சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கப்பட்டிருப்பது இப்போதுதான். மற்ற மாநிலங்களை விட மிக அதிக விலையில் தமிழ்நாடு மின்சாரம் கொள்முதல் செய்திருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இந்தச் சூழலில், கேரள மாநிலத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தை 14.50, 12.50 ரூபாய்க்கு வாங்கியிருப்பதே அதிக விலை என அங்கு சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனைச் சுட்டிக்காட்டி தவெக அரசை விமர்சித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "கேரளத்தைப் பற்றிய இந்தச் செய்தியில் நமக்கொரு பாடம் இருக்கிறது. த.வெ.க ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய், 37 ரூபாய், 41.50 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி மின்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் இதே காலத்தில் கேரள அரசு ஒரு யூனிட்டை 14.50, 12.50 ரூபாய்க்கு வாங்கியிருப்பதே அதிக விலை என சர்ச்சையாகியுள்ளது. அதைவிடவும் முக்கியமானது, ஒரு தனியார் நிறுவனம் தினமும் 500 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் 8.645 ரூபாய்க்கு வழங்குவதற்கு கேரள அரசை அணுகியும், அதைப் புறக்கணித்த சர்ச்சையில் கேரள மின்வாரியத் தலைவர் அந்தப் பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார். நமக்கென்ன கேள்வி என்றால், 8.645 / 12.50/ 14.50 ரூபாய்களில் கேரளாவுக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது? இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது, யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும். மின்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் DVAC அமைப்பும் இருப்பதால் அவர்கள் இதை விசாரித்தால் உண்மை வெளிவராது. சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை கொண்ட ஆணையம் விசாரிக்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார்.