இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள்

  • சென்னை: சட்டமன்றத் தேர்தலில் தோல்வி ஏன் என்று ஆராய கள ஆய்வு கமிட்டிகளை நியமித்திருந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். அந்த கள ஆய்வுக் குழுவினரும் தமிழகம் முழுவதும் பயணித்து ஆய்வு செய்து தங்களின் அறிக்கைகளை தலைமையிடம் ஒப்படைத்துவிட்டனர்.

    Advertisement

    இந்த நிலையில், ஆய்வுக்குழுவினர் அறிவாலயத்திற்கு அழைக்கப்பட்டனர். அவர்களும் மிகுந்த ஆர்வத்தில் அறிவாலயம் சென்றனர். தங்களின் அறிக்கைக் குறித்து விவாதித்து தலைவர் முடிவை எடுக்கப்போகிறார், உணமை நிலவரங்களை வெளிப்படுத்திய தங்களுக்கு வெகுமதி தரப் போகிறார் என்றெல்லாம் நினைத்து ஏக கற்பனைகளில் அறிவாலயத்திற்கு சென்றனர்.

    Advertisement

    அவர்களை ஸ்டாலினும் உதயநிதியும் சந்தித்தார்கள். ஆய்வு அறிக்கையின்படி தங்களிடம் விவாதிப்பார்கள், ஆலோசிப்பார்கள் என்று எதிர்பார்த்த அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. காரணம், ஆய்வு அறிக்கையின் மீது ஏதும் பேசாமல், அறிக்கையை பார்த்தேன். நன்றாக இருக்கிறது. இந்த புதிய ஆட்சி 6 மாதங்கள் நீடிக்காது. அதனால், தலைமை அறிவுறுத்தும் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று தெரிவித்ததை கடந்து வேறு எதையும் பேசவில்லை தலைவர் ஸ்டாலின். இதனால், கூட்டத்தில் கலந்து கொண்ட ஆய்வுக் குழுவினருக்கு ஏமாற்றம் என்கிறார்கள் அறிவாலயத்தார்.

    கூட்டத்தில், ஆய்வுக்குழுவினரை பேசச் சொல்லியிருக்கிறார் உதயநிதி. களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள், எதிர்கொண்ட பிரச்சனைகள், மாவட்ட கழகத்திலிருந்து வந்த இடையூறுகள் என பல விசயங்களைப் பேசியிருக்கிறார்கள். ஆனால், அதனை உள்வாங்கி, அதற்கு ஒரு சொல்யூசனை உதயநிதி கொடுப்பார் என எதிர்பார்த்தபோது, அதைப்பற்றி எந்த கவனமும் இல்லாமல், ஆய்வுக்குழுவினரை குற்றம்சாட்டும் விதமாகவே திருப்பிக் கேள்விக் கேட்டு அவர்களை சங்கடப்படுத்தியிருக்கிறார் உதயநிதி. இதனால், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் பார்த்து உதட்டைப் பிதுக்கியிருக்கிறார்கள்.

    Advertisement

    இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்

    தேர்தலுக்கு முன்பு பென் அமைப்பின் ஆலோச்சனைகளைக் கேட்டு கட்சியை எப்படி வழி நடத்தினார்களோ , அதையே மீண்டும் அமல்படுத்தும் விதமாக சில அறிவுரைகளை வழங்கி விட்டு, ஆய்வுக் குழுவினருடனான கூட்டத்தை ஸ்டாலினும் உதயநிதியும் முடித்துக்கொண்டனர்.

    அறிவாலயத்தை விட்டு வெளியேறிய ஆய்வு குழுவினர், இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம் என்கிற ரீதியில் முணுமுணுத்துக் கொண்டே கிளம்பிச்சென்றுள்ளனர்.

    ''18 மாவட்டங்களில் திமுகவுக்கு எம்.எல்.ஏ. க்கள் இல்லை. குறைந்த பட்சம், அது குறித்தாவது விவாதித்து ஒரு நல்ல முடிவை எடுப்பார்கள் ? அதிக வித்தியாசத்தில் தோல்வியை பறி கொடுத்த மாவட்டங்களிலாவது மாவட்ட நிர்வாகத்தை மாற்றியமைக்கும் வகையில் தலைமையின் பேச்சு இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், எதுவுமே இல்லை.

    Advertisement

    தேர்தலுக்கு முன்பு அறிவாலயத்தில் நடந்த மா.செ.க்கள் கூட்டத்தில், உங்கள் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் தோல்வி அடைந்தாலும், மாவட்ட செயலாளர் மாற்றப்படுவார் என எச்சரிக்கை செய்தார் தலைவர். ஆனால், இப்போது எங்களுடன் நடந்த ஆலோசனையை பார்த்தால் அதெல்லாம் நடக்குமா? என்பது சந்தேகம் தான். பிறகெதற்கு தோல்விக்கான காரணங்களை ஆராய குழு அமைக்க வேண்டும். அந்த குழுவைப் பற்றி எதற்கு பில்டப் கொடுக்க வேண்டும்? '' என்று ஆதங்கத்துடன் பேசுகிறார்கள் கள ஆய்வுக்குழுவினர்.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    MK Stalin did not react much to the official report of DMK loss against TVK