லீகல் விங்கை வரச்சொல்லுங்க.. திமுக வழக்கறிஞர்களுடன் உதயநிதி அவசர ஆலோசனை.. என்ன காரணம்?

  • சென்னை: திமுகவில் நிர்வாக ரீதியாகப் பல்வேறு அதிரடி மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த நான்கு நாட்களாகத் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனைகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விவாதித்து இறுதி ஒப்புதல் பெறுவதற்காக, திமுகவின் பொதுக்குழு மற்றும் திமுக செயற்குழு கூட்டம்அடுத்த வாரம் கூட்டப்பட உள்ளதாகத் தலைமை அறிவித்துள்ளது.

    Advertisement

    இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வழக்கறிஞர்கள் அணியினருடன் உதயநிதி ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இதற்காக தமிழகம் முழுவதிலும் உள்ள 13 மண்டலங்களைச் சேர்ந்த வழக்கறிஞர் அணியின் மாவட்ட, மாநகர மற்றும் ஒன்றிய அளவிலான முக்கிய நிர்வாகிகள் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் காலை முதலே அண்ணா அறிவாலயத்தில் குவிந்தனர்.

    Advertisement

    வழக்கறிஞர் அணியிலும் மறுசீரமைப்பு

    திமுகவின் அனைத்து நிலைகளிலும் நிர்வாக மாற்றங்கள் மற்றும் புதிய பொறுப்புகளை அமல்படுத்தத் தலைமை திட்டமிட்டுள்ள சூழலில், வழக்கறிஞர் அணியிலும் பல்வேறு சீரமைப்புகளை மேற்கொள்வது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், கள அளவில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய வழக்கறிஞர்களுக்குப் புதிய பொறுப்புகளை வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

    தவெகவின் சோசியல் மீடியா பதிவுகளுக்கு சட்டப்படி செக்

    சமீபகாலமாக சமூக வலைதளங்களில் திமுக மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகத்தினர் மற்றும் பிற எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு மேற்கொள்ளும் அவதூறு பிரச்சாரங்கள் குறித்து முதல் கட்ட ஆலோசனையில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. பொதுவெளியிலும் சமூக வலைதளங்களிலும் பரப்பப்படும் உண்மைக்கு மாறான கருத்துகள் மற்றும் எல்லை மீறும் பதிவுகள் மீது தயவுதாட்சண்யமின்றி சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து வழக்கறிஞர்களுடன் உதயநிதி ஆலோசனை நடத்தினார்.

    Advertisement

    மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ சிறப்பு வகுப்பு

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த வழக்கறிஞரும் திமுக சட்டத்துறை செயலாளருமான என்.ஆர். இளங்கோ எம்.பி பங்கேற்று நிர்வாகிகளுக்கு முக்கிய வழிகாட்டுதல்களை வழங்குகிறார். வரும் நாட்களில் திமுக மீது தொடுக்கப்படும் அரசியல்ரீதியான மற்றும் தனிநபர் அவதூறுகளை எதிர்கொள்வது எப்படி, ஆளும் தரப்பிற்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு சட்ட ரீதியாக எந்தெந்த வழிமுறைகளில் வலுவான பதிலடி தர வேண்டும் என்பது குறித்து நிர்வாகிகளுக்கு அவர் விளக்கமளித்தார்.

    சட்டமன்றத் தேர்தல் களம் மற்றும் அரசியல் சூழலை எதிர்கொள்ளும் வகையில், திமுக தனது வழக்கறிஞர் அணியைப் பலப்படுத்தவும், எதிர்க்கட்சிகளின் பிரச்சாரங்களை சட்ட ரீதியாக முறியடிக்கவும் இந்த ஆலோசனை மிக முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

    Advertisement

    இன்னும் பல முக்கிய முடிவுகள்

    சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக உட்கட்சி விவகாரங்களில் தீவிர மாற்றங்களை முன்னெடுக்க உள்ள சூழலில், வருகிற 22-ஆம் தேதி கூடவுள்ள திமுக உயர்நிலைச் செயல் திட்டக் குழு மற்றும் திமுக செயற்குழு கூட்டத்தில் மிக முக்கியமான முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. அதற்கான முடிவுகள் இன்றே எடுக்கப்பட உள்ளன.

    கட்சியின் கட்டமைப்பை இளைய தலைமுறையினரை நோக்கி நகர்த்தும் விதமாக, உதயநிதி ஸ்டாலினை திமுகவின் செயல் தலைவராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோன்று, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    மேலும், கட்சியில் புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டு அவற்றுக்கு செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளது. குறிப்பாக, 70 வயதைக் கடந்தவர்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாது என்ற புதிய விதியை அமல்படுத்தவும், பதவி இழக்கும் மூத்த நிர்வாகிகளுக்கு கட்சியில் மாற்று பொறுப்புகள் வழங்கவும் தலைமை திட்டமிட்டுள்ளது.

    - சிறப்பு நிருபர் எழில்

    English Summary

    MK Stalin Holds Mega Consultation with DMK Legal Wing: Strict Legal Action on TVK Social Media