சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு ஐசியூவிலும், ஆட்சி நிர்வாகம் கோமாவிலும் உள்ளதாக மு.க ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். பார்ட் டைம் முதல்வராகவும், ஃபுல் டைம் கன்டென்ட் கிரியேட்டராகவும் இருக்கும் விஜய்க்கு பொறுப்பே இல்லை எனவும் சோப்ளாங்கி ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமில்லை, காவல்துறையினருக்கு பாதுகாப்பில்லை என்றும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் விடுமுறை தினமான தீபாவளி தினத்தில் மட்டும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் உள்பட 15 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தேனியில் தீபாவளி அன்று நடு ரோட்டில் பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்ட உதவி சப் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்த நிலையில், தவெக எம்.எல்.ஏவும், துணை சபாநாயகருமான, ரவிசங்கர் தன்னிடம் மனு அளிக்க வந்த சாமானியர் ஒருவரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாகவும் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இந்த விவகாரம் முடிவதற்குள் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், போதையில் அவரது வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்ததாகவும் புகார் எழுந்தது. இதற்கு விளக்கம் அளித்த அருள் விக்னேஷ், என் மீது அவதூறு பரப்ப வேண்டும் என்றும், என் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் போலி செய்திகள் பரப்புகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்துள்ளேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் விமர்சித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்! ஒரே நாளில் 17 கொலைகள்!. குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு!.. பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு! இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில், குற்றவாளிகளுக்குப் பயமில்லை! காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை! த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை! மொத்தத்தில், Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை!.. என்று விமர்சித்துள்ளார்.துணை சபாநாயகர் பதவியில் இருந்து ரவி சங்கர் நீக்கப்படுவாரா? தவெக எம்எல்ஏக்களுக்கு விஜய் அவசர உத்தரவு
“ஆட்சியருக்கே ஆபாச மெசேஜ்”.. நிர்வாக நீதிபதிக்கே நீதி இல்லை! விஜய் அரசை விளாசிய எடப்பாடி பழனிசாமி