பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! அறிவாலயத்துக்கே சென்ற மீனவர்கள்! முக ஸ்டாலின் கொடுத்த உறுதி!

  • சென்னை: பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்க மீனவர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று 10-க்கும் மேற்பட்ட மீனவ அமைப்பு பிரதிநிதிகள், அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதை ரத்து செய்ய தாங்கள், ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்ததாக அவர் கூறினர்.

    Advertisement

    தற்போது செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகம் செயல்பட்டு வரும் நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    Advertisement

    இதற்கிடையே கடற்கரையோரம் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைக்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக மீனவர்கள், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என சொல்லி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

    புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினம்பாக்கம் பகுதி ஏற்கனவே அதிக மக்கள் தொகை கொண்ட குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். அங்கு தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் கூடுதல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அப்பகுதி பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

    அதுமட்டுமின்றி, பள்ளிகள், கல்லூரிகள், தேவாலயங்கள், உள்ளிட்ட பல்வேறு முக்கிய தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள அப்பகுதியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மாணவர்களும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர். மேலும், புதிய தலைமைச் செயலகம் அமைக்கத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலம், தங்களது பாரம்பரிய பயன்பாட்டில் இருந்து வந்த நிலம் எனவும், அதனை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மீனவ சமுதாய மக்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    Advertisement

    மீனவர்களின் எதிர்ப்பை மீறி அங்கு புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்பட்டால் போராட்டத்தில் குதிப்போம் என மீனவர்கள் சொல்லியுள்ளனர். மேலும் மீனவர்களுக்கு ஆதரவாக திமுக, பாஜக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் களமிறங்கி உள்ளன. இதற்கிடையே பட்டினப்பாக்கத்தில் மீனவர்களின் எதிர்ப்பை மீறி தலைமைச் செயலகம் கட்ட முயற்சி செய்தால் போராட்டம் நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்து இருக்கிறார்.

    இதனிடையே இன்று இடைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த அண்ணா அறிவாலயத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது தமிழ்நாடு புதுச்சேரி மீனவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசினர். அந்த சந்திப்பின்போது மீனவர்களின் எதிர்ப்பை மீறி பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைப்பதை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்ததாகவும், நிச்சயம் மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பேன் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்ததாக கூறியுள்ளனர்.

    English Summary

    Fishermen meet Stalin at Anna Arivalayam seeking cancellation of the Pattinapakkam Secretariat plan as opposition to the project intensifies.