சென்னை: என்னுடைய மிசா கைதை எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். என்னுடைய தியாகத்திற்கு மார்க் போடுவதற்கு எவனுக்கும் தகுதி கிடையாது என்று கூறிய ஸ்டாலின், எம்ஜிஆர் அமைத்த இஸ்மாயில் கஷிஷன் அறிக்கையை படிக்க தெரிந்தவர்கள் எடுத்து படித்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்று கூறினார். அதற்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் தான் கைது செய்யப்பட்டார் என்று தீர்ப்பு வழங்கினார். இருப்பினும் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார், ஸ்டாலின் மிசா சட்டத்தின் கைது செய்யப்பட்ட நகல் எதுவும் இருக்கிறதா என்று மீண்டும் பேசி சர்ச்சையை கிளப்பினார்.
இதனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிலையில் திமுகவின் முப்பெரும் விழா இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஸ்டாலின் பேசுகையில், தொழில்துறை அமைச்சரோ, தொழில்துறை செயலாளரோ இல்லாமல் முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ளார் முதல்வர். இதுதான் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் லட்சணமா? ரீல்ஸ் வெறிபிடித்த ஆளுங்கட்சியால் சட்டசபை கூட மாண்பை இழந்து நிற்கிறது. கொளத்தூர் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் தப்பித்துவிட்டேன்.. இந்த கொடுமை எல்லாம் பார்க்காமல் இருப்பதற்கு.. கொளத்தூர் மக்களுக்கு கோடான கோடி நன்றி.. முதல்வர் சிரிப்பதை பார்க்க முடியவில்லை என்று ஆளுங்கட்சி எம்எல்ஏ ஸ்க்ரீன் வைக்க கேட்கிறார்கள். உதயநிதி ஸ்டாலின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், மிசா, சர்க்காரியா கமிஷன் என்று சம்பந்தமில்லாமல் பேசி அவதூறுகளை பரப்புகிறார்கள். மிசா பற்றி பேசுகிறவர்களுக்கு.. நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான்.. என்னுடைய மிசா கைதை எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னுடைய தியாகத்திற்கு மார்க் போட எவனுக்கும் தகுதி கிடையாது. அண்ணன் சிட்டி பாபு தன்னுடைய சிறை டைரியில் பதிவிட்டு இருக்கிறார். அதனை காலத்தால் அழிக்க முடியாது. எம்ஜிஆர் அமைத்த இஸ்மாயில் கமிஷன் இருக்கிறது.. படிக்க தெரிந்தவனாக இருந்தால், அதனையெல்லாம் எடுத்து படிக்கட்டும்.. ஓட்டு போட்ட மக்கள் வாக்குறுதிகளை கேட்டால், அவதூறு பேசி ரீல்ஸ் போடுகிறார்கள். அந்த கட்சிக்கு தமிழக ரீல்ஸ் கழகம் என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.