வேட்புமனுவில் சொத்துகளை மறைத்ததாக மு.க ஸ்டாலினுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு வாபஸ்! என்ன நடந்தது?

  • சென்னை: திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்த தேர்தல் வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக தாக்கல் செய்த மனுவை சிவஞானசம்பந்தம் திரும்ப பெற்றார். இதையடுத்து வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    Advertisement

    திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் விஎஸ் பாபுவிடம் தோல்வி அடைந்தார். சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் உயர் நீதிமன்றத்தில் வேட்பாளர்களின் வெற்றி, வேட்பு மனு விவரங்கள் தொடர்பாக தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

    Advertisement

    மு.க ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு

    அந்த வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவஞானசம்மந்தம் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் நான் போட்டியிட்டேன். இந்த தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஸ்டாலின், தாக்கல் செய்த வேட்புமனுவில் திமுக அறக்கட்டளை நிர்வாகியாக இருப்பதையும் அந்த அறக்கட்டளை சார்பில் வாங்கப்பட்ட 2.27 கோடி ரூபாய் சொத்து விவரங்கள் உள்ளிட்டவற்றை மறைத்துள்ளார்.

    என்ன தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன?

    இது பற்றி விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை. எனவே, எனது புகார் மீது விசாரணை மேற்கொள்ளுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு கடந்த 27 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி அருள் முருகன் அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    Advertisement

    அப்போது, வேட்பு மனுவில் என்ன தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளன? என்று கேள்வி எழுப்பினார். அதற்கான ஆதாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து சில ஆவணங்கள் மனு தாரர் தரப்பில் காட்டப்பட்டது. இந்த ஆவணங்கள் தமிழில் இருந்ததால் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

    மனுவை வாபஸ் பெற்றார்

    அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சிவஞானசம்பந்தம் தனது மனுவை திரும்ப பெறுவதாக கூறினார். இதையடுத்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. வேட்பு மனுவில் தனிப்பட்ட சொத்து விவரங்கள் மட்டுமே குறிப்பிட வேண்டும்.

    Advertisement

    அறக்கட்டளை சொத்துகள் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அறக்கட்டளை சொத்துகள் தனிப்பட்ட சொத்துகள் ஆகாது. நிரூபிக்க எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் நோட்டீஸ் எதையும் பிறப்பிக்க இயலாது என்று நீதிபதிகள் கூறினர். இதையடுத்தே தனது மனுவை திரும்ப பெறுவதாக மனுதாரர் கூறினார்.

    நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க ஸ்டாலின் 74,202 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் விஎஸ் பாபு 82,997 வாக்குகள் பெற்று 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தார்.

    English Summary

    MK Stalin: The election petition filed against DMK leader MK Stalin has been withdrawn. Sivagnanasambandam withdrew the petition, which had alleged the concealment of asset details in the nomination papers. Following this, the court dismissed the case.