சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள்

  • சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து முக்கிய முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதுள்ள ஏழு துணைப் பொதுச்செயலாளர் பதவிகளை 10 ஆக உயர்த்தி, பல்வேறு சமூகங்கள் மற்றும் மதங்களுக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Advertisement

    2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத வெற்றியை பெற்று ஆட்சியை கைப்பற்றிய பிறகு, திமுக தனது தோல்விக்கான காரணங்களை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து வருகிறது.

    Advertisement

    அதில் முக்கியமாக சமூக பிரதிநிதித்துவம் தொடர்பான விஷயம் கட்சித் தலைமையை யோசிக்க வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 2026 தேர்தலில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கியது.

    திமுக மறுசீரமைப்பு

    அதோடு, சமூக அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தையும் முன்னிறுத்தியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இதன் மூலம் பல தரப்பினரின் ஆதரவை அக்கட்சி பெற்றது. அது தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது. மறுபுறம் திமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் மாற்றம் ஏற்பட்டதாக கட்சியின் உள்கட்டமைப்பு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக கிறிஸ்தவ சமூக வாக்குகள் கணிசமான அளவில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாறியது.

    Advertisement

    சிறுபான்மை சமூகம்

    நீண்டகாலமாக கூட்டணியில் இருந்த முஸ்லிம் லீக் கட்சியும் கூட்டணியில் இருந்து விலகியதால் சிறுபான்மை சமூகங்களிடையே புதிய அரசியல் சூழல் உருவாகியுள்ளதாகவும் திமுக தலைமை கருதுகிறது. இந்த சூழ்நிலையில் கட்சியின் உயர்மட்ட நிர்வாகத்தில் கூடுதல் சமூக பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது. தற்போது திமுகவில் துணைப் பொதுச்செயலாளர்களாக கனிமொழி, பெரியசாமி, ஆ.ராசா, சுப்புலட்சுமி ஜெகதீசன், சிவா, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி மற்றும் சாமிநாதன் உள்ளிட்டோர் உள்ளனர்.

    துணைப் பொதுச்செயலாளர்

    இவர்களில் பல்வேறு சமூகங்களுக்கு ஏற்கனவே பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருந்தாலும், இன்னும் சில முக்கிய சமூகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கட்சிக்குள் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக நாடார், நாயுடு மற்றும் தேவேந்திரகுல வேளாளர் சமூகங்களுக்கு கட்சியின் உயர்மட்ட பொறுப்புகளில் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது. அதேநேரத்தில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த முக்கிய தலைவர்களுக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    Advertisement

    மு.க.ஸ்டாலின்

    இதன் காரணமாகவே தற்போது ஏழு துணைப் பொதுச்செயலாளர் பதவிகளை 10 ஆக உயர்த்தும் யோசனையை மு.க.ஸ்டாலின் பரிசீலித்து வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சமூக சமத்துவத்தை உருவாக்குவதோடு, தேர்தலுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்டுள்ள அதிருப்திகளையும் சமாளிக்க முடியும் என திமுக தலைமை நம்புகிறது.

    அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    மேலும், தேர்தல் தோல்விக்குப் பிறகு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட கருத்துக்களிலும், சமூக அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனால் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் அமைப்பு கட்டமைப்பில் மாற்றங்களை கொண்டு வர திமுக தலைமை திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும், துணைப் பொதுச்செயலாளர் பதவிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது தொடர்பாக இதுவரை திமுக சார்பில் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

    Advertisement

    அறிவாலயம்

    கட்சியின் பொதுக்குழு அல்லது செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பான முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும், அதன் பின்னரே புதிய நியமனங்கள் அறிவிக்கப்படும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனையடுத்து அப்பதவிகளைப் பெற திமுக சீனியர்கள் ரெடியாகி வருகின்றனர் என்கின்றனர் அறிவாலய உடன்பிறப்புகள்.

    English Summary

    DMK may increase deputy general secretary posts to boost social representation after the 2026 Assembly election setback.