சென்னை: "டெல்லியில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டம் நாடு முழுவதையும் ஈர்த்துள்ளது. நீட் தேர்வில் ஏற்படும் ஆபத்தை தொடக்கத்தில் இருந்தே திமுக சுட்டிக்காட்டி வருகிறது. நீட்டை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே அனைத்து சிக்கல்களுக்கும் ஒரே தீர்வு" என மாணவர்கள் போராட்டம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முயற்சி செய்த கரப்பான் பூச்சி கட்சியினரை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கடுமையாகத் தாக்கினர். இதனால், இளைஞர்களின் போராட்டம் நாடு முழுவதும் பரவி அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் முன்னாள் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "டெல்லியில் மாணவர்கள் நடத்தும் போராட்டம் தற்போது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. நீட் தேர்வு, பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் தான் முதலில் எச்சரித்தோம். அதனால்தான் திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து, அது ஏற்படுத்தும் ஆபத்துக்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. சமூக நீதியைப் பாதுகாப்பதில் இந்தியாவிற்கு வழிகாட்டி தமிழ்நாடு. நீட் தேர்வை ரத்து செய்ய சட்டத் திருத்தம் கொண்டு வந்த மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டிற்கு ஒரே ஒரு கோரிக்கைதான் உள்ளது, அது நீட் ஒழிப்பு. மற்ற எந்தக் கோரிக்கையையும் விட, நீட் தேர்வை ஒழிப்பதுதான் இந்தப் போராட்டங்களின் மையமாக இருக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டுமே இந்தப் பிரச்சனைகள் அனைத்திற்கும் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்" என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.