நான் முதல்வன் திட்டத்தை முடக்குவதா? படிங்க, படிங்கன்னு சொல்லி வந்தேன்.. கொந்தளித்த ஸ்டாலின்

  • சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் சமூக வலைதளப் பக்கங்களின் பெயரை மாற்றலாம், பழைய பதிவுகளை நீக்கலாம். ஆனால் அந்த திட்டத்தின் மூலம் பயனடைந்த இளைஞர்களின் மனதில் பதிந்துள்ள சாதனைகளையும் நன்றியுணர்வையும் அழிக்க முடியாது என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    கடந்த திமுக ஆட்சியில் நான் முதல்வன் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ், 2022 ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கல்வித் திறன், தொழில்நுட்ப அறிவு, வேலைவாய்ப்பு திறன் மற்றும் தொழில் முனைவுத் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த நான் முதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டது.

    Advertisement

    நான் முதல்வன் திட்டம்

    இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, டேட்டா அனலிட்டிக்ஸ், சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட உலகளாவிய சந்தையில் அதிக தேவை கொண்ட துறைகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதுமட்டுமின்றி, ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கும், டிஎன்பிஎஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்ட அனைத்து வகையான அரசு போட்டித் தேர்வுகளுக்கும் சிறப்புப் பயிற்சிகள் இந்த திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டன.

    நான் முதல்வன் திட்டத்தில் சேரும் தேர்வர்களுக்கு, உண்டு, உறைவிடப் பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அதுமட்டும் இன்றி, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நான் முதல்வன் திட்டத்தின் பெயர் "திறன் தமிழ்நாடு" என மாற்றப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    Advertisement

    இதயத்தில் ஆழமாக பதியப்பட்டுவிட்டது

    நான் முதல்வன் திட்டம் தொடர்பாக பதிவிட்ட பழைய பதிவுகள் மற்றும் வீடியோக்களும் நீக்கம் செய்யப்பட்டன. மே 15 ஆம் தேதி முதல் உள்ள பதிவுகள் மட்டுமே இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில், நான் முதல்வன் திட்ட சாதனைகளை மக்கள் மனதில் இருந்து நீக்க முடியாது என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க ஸ்டாலின் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

    "நீங்கள் நான்முதல்வன் சோஷியல் மீடியா பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை டெலிட் செய்யலாம். ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும், நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து டெலிட் செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாகப் பதியப்பட்டுவிட்டன.

    Advertisement

    கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் "படிங்க, படிங்க, படிங்க" என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான், நான் முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்" என்று பதிவிட்டுள்ளார்.

    English Summary

    MK Stalin criticized the reported renaming of the Naan Mudhalvan scheme and deletion of its social media content. He said the scheme transformed the lives of thousands of students and its achievements cannot be erased from public memory.